பக்கம்:ஓ மனிதா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆடு கேட்கிறது

61

மனிதா! என்னை வைத்து நீ ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறாயே, அது நினைவிருக்கிறதா, உனக்கு? இல்லாவிட்டால் சொல்கிறேன், கேள்:

ஒரு வாய்க்காலின் இக்கரையில் நின்று ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததாம். அக்கரைக்குத் தண்ணீர் குடிக்க வந்த ஓர் ஓநாய் ‘ஏண்டா பயலே! தண்ணீரை ஏன் கலக்குகிறாய்?’ என்று ஆட்டுக் குட்டியை வம்புக்கு இழுத்ததாம். ‘இது என்ன அநியாயம்? நான் எங்கே தண்ணீரைக் கலக்கினேன்?’ என்று ஆட்டுக்குட்டி விழித்ததாம். ‘நீ கலக்காவிட்டால் உன் அப்பன் கலக்கியிருப்பான்; உன் அப்பன் கலக்காவிட்டால் உன்னுடைய பாட்டன் கலக்கியிருப்பான்’ என்று உறுமிக் கொண்டே ஆட்டுக்குட்டியின் மேல் பாய்ந்து அதைக் கொன்று தின்று விட்டதாம் ஓநாய்.

அதாவது, எந்த அநியாயத்தைச் செய்தாலும் அதை ஏதோ ஒரு நியாயத்தின் பேரால் செய்வது உன் தருமம். அந்தத் தருமத்தையே ஓநாயின் கதையிலும் நீ அடி நாதமாக வைத்திருக்கிறாய்!

இந்த ஒருமைப்பாடு விஷயத்தில் மட்டும் அதை நீ விட்டுவிடுவாயா?—ஒருபக்கம் ஒருமைப்பாட்டைப்பற்றி பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் நீ ‘தனிக்காட்டு ராஜ தர்பார்’ நடத்த வேண்டும் என்பதற்காக மொழி, இனம் என்று ஏதேதோ சொல்லி மக்களைக் கிளப்பி விடுகிறாயே?—கடைக்குப் போய்க் கையில் காசில்லாவிட்டாலும் ‘ரைஸ் ஒன் கிலோ’ என்றால் கொடுத்து விடுவான்; ‘அரிசி ஒரு கிலோ’ என்றால் கொடுத்து விடுவான். கையில் காசிருந்தாலும் ‘சாவல் ஏக் கிலோ’ என்றால் கொடுக்கமாட்டானா என்றால், ‘கொடுக்கிறானோ இல்லையோ, அதுதான் ஒருமைப்பாட்டுக்கு வழி!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/62&oldid=1370843" இலிருந்து மீள்விக்கப்பட்டது