சிட்டுக்குருவி கேட்கிறது
67
எதைப் பற்றியும் கவலைப்படாத பழைய காட்டுமிராண்டி நாகரிகம்—அதற்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள பெயர் ஹிப்பிஸம்!
எந்த ஆயுதம் வந்தென்ன, எந்த நாகரிகம் வந்தென்ன, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட பேதம் குறையவில்லை; வளருகிறது.
இருப்பவனைப் பார்த்து இல்லாதவன் குமுறுகிறான்; அந்த இல்லாதவன் ‘குமுற’லை இருப்பவன் ‘பொறாமை’ என்று பொய் சொல்லி மறைக்கப் பார்க்கிறான்.
இவர்கள் இருவரையும் ஏககாலத்தில் ஏமாற்றிப் பிழைக்க விரும்புபவனோ, ‘எல்லாம் அவன் செயல்; அவன் திருவுள்ளத்தை யாரே அறிய வல்லார்?’ என்று சூனியமான வானத்தைக் காட்டிக் கதைக்கிறான்.
இவனால் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளோ, பகல் வேடதாரிகள் பலருக்கு ‘முதல்’ இல்லாத ‘மூலதன’மாக இருக்கிறார்.
இவரை வைத்து, ‘உண்டு’ என்பவனும் பிழைக்கிறான்; ‘இல்லை’ என்பவனும் பிழைக்கிறான்.
இவர்களுக்கு இடையே இருப்பவன் மட்டுமல்ல; இல்லாதவனும் இளிச்சவாயன் ஆகிறான்!
ஒ மனிதா! நீ சொத்துரிமை தேடியது எதற்காக?—நிம்மதிக்காக அந்த நிம்மதி இப்போது எங்கே இருக்கிறது?