உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ மனிதா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஓ, மனிதா!


எங்கள் வீரமும் அப்படித்தான்-எதிரி எங்களை விடப் 'பலவீனமானது' என்று தெரிந்தால் அதை நாங்கள் நேருக்கு நேராக நின்று எதிர்ப்போம். 'பலசாலி' என்று தெரிந்தால் எதற்கும் தயங்காமல் பகிரங்கமாகவே வாளை தாழ்த்தி, 'வாள், வாள்' என்று கத்திக்கொண்டே பின் வாங்கி ஓடிவிடுவோம். உங்களைப்போல் வேறு யாராவது எதிரியை அடித்து விரட்டும் வரை உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்து ‘யார் அந்தப் பயல்? அதற்குள்ளே ஓடி விட்டானா? அப்போதே சொல்லியிருந்தால் அவன் காலைப் பிடித்து வாழை மட்டையைக் கிழித்துப் போடுவது போல் கிழித்துப் போட்டிருப்பேனே?’ என்று ‘புறநானூறு’ பேசமாட்டோம்.

இப்படி ஒரு சான்றா, இரண்டு சான்றா? - எத்தனையோ சான்றுகள் காட்டிக்கொண்டே போகலாம். அவற்றைப் படிக்க உங்களுக்குப் பொறுமை வேண்டாமா? - சுருங்கச் சொன்னால் எங்கள் வாழ்க்கை உண்மை வாழ்க்கை. அதில் எங்கள் குணத்தை மாற்றி நாங்கள் நடிப்பதே கிடையாது.

மனிதா! உங்களில் ‘இலக்கிய விமரிசகர்கள்’ என்று சிலர் இருக்கிறார்களே, அவர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் நீ கவனித்திருக்கிறாயா? நான் அவர்களைக் கவனிக்கும் போதெல்லாம் உன்னைப் போல் சிரிக்க முடியாத குறையை நினைத்து வருந்துவேன், அவர்கள் கதைகளில் ரியலிஸத்தைத் தேடுவார்கள்; கட்டுரைகளில் ‘ரியலிஸத்’தைத் தேடுவாகள். வாழ்க்கையில் தேடவே மாட்டார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/77&oldid=1369743" இலிருந்து மீள்விக்கப்பட்டது