பக்கம்:ஓ மனிதா.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோழி கேட்கிறது

99

வென்று காற்று வீசச் செய்யப்பொங்கி வரும் அலைகள் இருக்கின்றன. அடுத்தாற் போல் சோலை இருக்கிறது; அதில் கூவும் குயில்களும், ஆடும் மயில்களும் இருக்கின்றன. தடாகம் இருக்கிறது; அதில் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள் இருக்கின்றன. சலசலத்து ஓடும் ஆறு இருக்கிறது, அதில் மினுமினுத்து ஓடும் மீன்கள் இருக்கின்றன. கொஞ்சம் துணிந்து காட்டுப் பக்கமாகப் போய்விட்டால் மலைகள், அருவிகள்—அவற்றுக்கருகே துள்ளித் திரியும் மான்கள், கனி கொடுக்கும் மரங்கள்—அந்த மரங்களில் கிளைக்குக் கிளை தொத்தித் திரியும் குரங்குகள்—அடாடாவோ, அடடா! அங்கே கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கிறது!

பொழுது போக்குக்காக இயற்கை அளித்துள்ள இத்தனை வசதிகள் போதாதென்று செயற்கையாக வேறு நீங்கள் எத்தனையோ செய்து கொண்டிருக்கிறீர்கள். சினிமா, சங்கீதம், நடனம், நாடகம் என்று ஒரு புறம்; கண்காட்சி, காபரே, லயன்ஸ் கிளப், காஸ்மா பாலிட்டன் கிளப் என்று இன்னொரு புறம்—இவை தவிர எத்தனையோ புத்தகங்கள், விதவிதமான விளை யாட்டுக்கள்—இத்தனை இருந்தும் அந்தக் காட்டு மிராண்டிக் காலத்தில் உங்களைப் பற்றியிருந்த மிருக வெறி, ரத்த வெறி போன்றவையெல்லாம் இன்னும் உங்களை விட்டுப் போன பாடாயில்லையே?

அவற்றைக் களைந்தெறிந்து உங்களைத் தெய்வமாக்காவிட்டாலும் மனிதனாக்க இதுவரை உங்களிடையே தோன்றிய மகான்கள் எத்தனை! மகாத்மாக்கள் எத்தனை! மதங்கள் எத்தனை! சமயங்கள் தான் எத்தனை எத்தனை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/80&oldid=1370909" இருந்து மீள்விக்கப்பட்டது