பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



V

 நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்துப் பாதுகாத்து வைத்த தனிப்பாக்கள் மட்டுமே ஆகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து, அவற்றால் அறியலாகும் ஒளவையாரின் செவ்வியினையும், குண நலன்களையும் உளங்கொண்டு போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள், இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன்.

எந்தச் செய்யுள் எந்த ஒளவையாரால் பாடப்பெற்றது? அஃது எழுந்த காலம் என்ன? அந்த ஒளவையாரின் வரலாறு யாது? அவரோடு தொடர்பு உடையவர் யார்? அவர் செய்த செயல்கள் எல்லாம் என்னென்ன? இப்படிப்பட்ட சிந்தனைகளையெல்லாம் ஆராய்ச்சித் துறையிலே அயராது ஈடுபட்டு இன்பம் காணுவோரான அறிவுசால் பெருமக்களுக்கு விட்டுவிட்டு, நாம் இனிய தமிழ்ச்சுவையில் மட்டுமே மனஞ்செலுத்தி மகிழ்வோமாக.

சங்கநூற்களில் பயின்றுவரும் ஒளவையாரின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை. அவற்றைத் தெளிவுரை அமைப்போடு வெளிவந்துள்ள எனது சங்கநூற் பதிப்புக்களுள் கற்று இன்புறுக.

தமிழ் நலத்தைக் கனிவாக்கும் இனிதான இச்செய்யுள் தொகுப்புநூலைத் தமிழன்பர்கள் விருப்புடன் வரவேற்று இன்புறு வார்கள் என்பதில், எப்பொழுதுமே எனக்கு நம்பிக்கையுண்டு.

வாழ்க தமிழ் ஆர்வம்!

சென்னை.

புலியூர்க் கேசிகன்

1988