பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஔவையார் தனிப்பாடல்கள்



தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்.

"அறுசுவையோடு உண்கின்ற இன்பம், பெற்ற தாயின் மறைவோடு போய்விடும். தந்தையின் பிரிவோடு கல்வி கற்பதற் கான வசதிகள் இல்லாது போய்விடும். பெற்ற குழந்தையின் மறைவோடு, ஒருவன் பெற்ற செல்வம் என்பதும் இல்லாதே போய்விடும். மாயமான வாழ்வு நலம் என்பதெல்லாம் உறவினரைப் பிரிந்ததும் போய்விடும். உடன் பிறந்தவர் இல்லாதபோது பக்கத்துணையான வலிமை போய்விடும். பொற்றாலி அணிந்த மனையாளின் மறைவோடு எல்லா நலனுமே ஒருவனுக்கு இல்லாமற் போய்விடும்" என்பது பொருள்.

'பொற்றாலியோடு எவையும் போம்' என்றதனால், தாலி போவதோடு எல்லாமே இல்லாமற் போய்விடும் எனப் பெண்ணைக் குறித்துச் சொல்லியதாகவும் இதனைக் கொள்ளலாம்.

64. துரும்பு!

லரும் ஒன்றைப் பெரியதாகப் பாவித்துப் பேணி வருகிறார்கள். ஆனால் சிலர் அங்ஙனம் பலரும் பெரிதாகப் பாவிப்பதையே மிகவும் சர்வ சாதாரணமானதாகக் கருதுகின்றார்கள். இது அவரவர்களின் மனப்பாங்கைப் பொறுத்தது.

உதார குணம் உள்ளவன் ஒருவன் பொன்னைத் துரும்பாகவே மதிப்பான். பிறருக்கு அதனை வழங்குவதில் மகிழ்வான். தனக்கெனக் குவித்து வைக்க விரும்பமாட்டான். வீரன் ஒருவன், தன் நாட்டுக்காகப் போர்க்களத்தில் மடிவதை எளிதானதாகக் கருதுகிறான். உயிர் பலருக்கும் பெரிதாகத் தோன்றும். ஆனால், அவனுக்கோ அது சிறு துரும்பாகத் தோன்றுகின்றது.

ஆய்ந்து தெளிந்த அறநெறியாளர் இருக்கிறார்கள். அவர்கள் இன்பம் எதுவென உணர்ந்தவர்கள். அழகிய பெண்களைக் கண்டால் அவர்கள் மதி மயங்குவதில்லை. பெண்களைத் துரும்பாகக் கருதி ஒதுக்கி விடுகிறார்கள்.

காட்டிடத்தே சென்று, ஆசைகளை ஒடுக்கித் தவநெறி பூண்ட துறவியர் வேந்தனையும் ஒரு துரும்பாகவே கருதுகிறார்கள். அவனைக் கண்டு அவர்கட்கு அச்சம் இல்லை; அவனிடம் அவர்கள் எதனையும் எதிர்பார்ப்பதும் இல்லை.