பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

93


பெண்கள் நல்லவராக இருக்க முடியும். அவர்கள் கற்புப் பேணுவது என்பது ஆண்களைப் பொறுத்ததே' இவ்வாறு தம் கருத்தை விளக்குகிறார்.

'இதேபோல, ஆண்கள் அறிவுடையவர்களாகும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள்தாம். பெண்கள் அவர்களுடைய சிறந்த தன்மையைக் கெடுக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் இது அந்த ஆண்கட்கும் இயலுவதாகும். பெண்கள்பால் காமுற்று மயங்கிக் கிடத்தல் கூடாது; அவர்கள் பேச்சைக் கேட்டு வாழும் பெண்பித்தராகிவிடக் கூடாது' என ஆண்களையும் அவர் எச்சரிக்கிறார்.

இவ்வாறு பெண்களின் கற்பழிவுக்கு ஆண்களையும், ஆண்களின் அறிவுச்சிதைவுக்குப் பெண்களையும் காரணமாகக் காட்டிக் கூறினார் ஒளவையார்.

நல்லார்கள் எல்லாரும் நல்லவரே தன்மையால்
வல்லாராற் கேடு படாராயின் - நல்லறி
வாண்மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண்டீரும்
மாண்பு கெடுக்கா விடின்.

“பெண்கள் அனைவரும் இயல்பினால் வலிமையுடைய ஆடவர்களால் கெடுக்கப்படாமல் இருந்தனராயின், கற்புநெறி தவறாதவர்களாகவே இருப்பார்கள். பெண்களும் ஆண்களின் மாண்பினைக் கெடுக்காமலிருந்தனரானால் ஆண்மக்களுள் பற்பலருக்கும் நல்லறிவு உண்டாகி, அவர்களும் சிறப்படை வார்கள்” என்பது செய்யுளின் பொருள்.

69. காலமும் தனமும்!

செல்வம் வாழ்விற்கு முதன்மையானது. இதனை எல்லாரும் உணர்கின்றோம். செல்வத்தைத் தேடி அடையவும் பலப்பல முயற்சிகளை எடுத்துக் கொள்ளுகின்றோம்.

ஆனால், எவ்வளவுதான் முயற்சி எடுத்துக்கொண்டபோதும், செல்வநலம் அனைவருக்கும் எளிதாக வந்து வாய்த்துவிடுவதில்லை. சிலருக்கு முயற்சி இல்லாதேகூட அது தானாக வந்து சேருகின்றது. பலரின் முயற்சிகள் வீணாவதுடன், துன்பமும் துயரமும் நட்டமும் இழப்பும் அவரை வந்து குழுகின்றன.

ஒரே தொழிலில் இருவர் ஒரே சமயத்தில் ஒரே முதலீட்டுடன் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகள் கழிகின்றன. முயற்சியின் செம்மையில் இருவரையும் நிகராகவே கொள்ளலாம். எனினும், ஒருவன் தன் முதலீட்டைப் பன்மடங்கு பெருக்கியுள்ளான். மற்றவனோ முதலையும் இழந்து, அதன்மேற் பல மடங்கு கடன் தொல்லையிலும் சிக்கியுள்ளான்.