பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

97


அடக்கி வென்றவனுடைய வீரமே உண்மையான வீரமாகும். எக் காலத்தாயினும் சோம்பி மடிந்து போகாமல் உயிருள்ள வரைக்கும் அயராது கற்பதே கல்வியாகும். தன்மைப் பிறர் ஏவிப் பணிகொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்” என்பது பொருள்.

72. பலிக்கு உழன்றீர்!

நின்னிலத்திலுள்ள திருக்கோயில் இறைவன்மீது பாடிய நிந்தாஸ்துதி இச்செய்யுள். இறைவன் பிச்சை ஏற்று உண்ட அந்த திருவிளையாட்டை மனத்தே கொண்டு, அவனைப் பழிப்பது போல் போற்றுகின்றார்.

ஒருவன் இரந்து உயிர் வாழ்வதற்கு வேண்டியதொரு இக்கட்டான நிலைமையில் இருந்தான் என்றால், அவன் அந்த அளவிற்கு வறுமையினாலே உழலுகின்றவன் என்றுதான் பொதுவாகக் கொள்ளுதல் வேண்டும். சில சமயங்களில் சிலர்பால் இந்தப் பொதுவிதிக்கு முரண்பாடான நிலைமைகள் தோன்றுதலையும் காணலாம். வாழ்க்கை செவ்வையாக நிகழுவதற்கு வேண்டிய எல்லா வகையான வசதிகளுடனும் இருந்திருப்பார்கள் என்றாலும், ஏதோ மனவேறுபாடோ குழப்பமோ அவர்களை அனைத்தினின்றும் பிரித்துவிடும். இரந்து உயிர் வாழ்தலான ஓர் இழிநிலைக்கும் கொணர்ந்துவிடும்.

'இரந்து உயிர் வாழ்தல்' என்ற நிலையைச் சமூகத்தில் நிலவக்காணும் திருக்குறள் ஆசிரியர் உள்ளம் குமுறுகின்றார். 'பரந்து கெடுக உலகு இயற்றியான்' என்று உலக முதல்வனையே சபிக்கின்றார்.

இங்கே இறைவனே, உலக முதல்வனே இரக்கின்றான். பிட்சாடன மூர்த்தியாக வரும் பெருமான்! அவனுடைய திருக்கோலம்! ஒளவையாரின் உள்ளத்தில் அதனையே நிரந்தரமாகக் கொண்டிருக்கும் இரவல்மாக்களின் நினைவை எழுப்புகின்றது.

"பெருமானே! நின் சொத்துக்களைக் கண்காணிக்க நினக்கு இரண்டு குமாரர்கள் உள்ளனரே! என்றும் மூப்படையாத தன்மையினை உடைய எருதும் உமக்கு உரியதாக இருக்கின்றதே!

விளக்கமுறத் தோன்றும் கங்கை நதியின் நீர்ப்பாய்ச்சலுக்கான வசதியும் இருக்கின்றதே! இவற்றுடன் நல்ல நில வசதியும் உண்டே!

மேலும், நும்மிடத்தில் பாற்பாக்கியவதியும் நீங்காது எப்போதும் உள்ளனளே!