பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

ஔவையார் தனிப்பாடல்கள்



83. காக்கை கரிது!

நால்வர் நாடுகளையும் போற்றுவது இந்தச் செய்யுள். இதன்கண் அந்தந்த நாடுகளின் வேறு சில தனிப்பண்புகளும் உரைக்கப்படுகின்றன.

'வஞ்சி' கடற்கரையூர். அதனைக் குறிக்க அதன்கண் உள்ள நீர்ப்பறவை எல்லாம் வெண்மை நிறம் என்றனர்.

'நான்மாடக் கூடல்' பாண்டியனுக்கு உரியது. அவனுக்குப் பஞ்சவன் எனவும் பெயர். அவன் தமிழ்ப் பேணிய தலைவன். அதனால் அவன் நாட்டிற் கல்வி வல்லமை உடையதாகத் திகழும் என்றனர்.

சோழநாட்டவர் சோற்றுக்கு நெல்மட்டும் விளைத்தவர் அல்லர். கரும்பினையும் பயிரிட்டு வந்தனர். அதன் சாறு மிகவும் இனிமையானது.

தொண்டைமானுக்கு உரியது காஞ்சி நகரம். அதன் கண் காக்கைகள் மிகுதி. அவை கருநிறம் உடையன.

இந்தக் கருத்துக்கள் கொண்டதாகச் செய்யுள் அமைந்தது;அது இது :

வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்றன்
நான்மாடக் கூடலில் கல்வி வலிது
சோழன் உறந்தைக் கரும்பினிது தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது.

"வஞ்சிக்கண் குருகெல்லாம் வெள்ளை நிறத்தன. பாண்டியனின் நான்மாடக் கூடலிற் கல்வி வலியது. சோழனின் உறந்தையிடத்துக் கரும்பு இனியது. தொண்டைமானின் கச்சியுள் காக்கை மிகவும் கரியது” என்பது பொருள்.

'காக்கை கரிது’ என்பதற்குக் காவல் கடுமையானது எனவும் பொருள் கொள்வர்.

84. அனுபவித்தல்!

காவியமோ கவிதையோ அதனை அனுபவிக்கின்றவரின் தன்மையினைப் பொறுத்தே இனிதாகவும் வேம்பாகவும் தோன்றுகின்றன. இப்படி அனுபவிப்பவர், தம் குறையினை மறந்து, தாம் கற்கும் நூலிற் குறைசொல்லப் புகும் பேதைமை பெரிதும் வெறுத்தற்கு உரியது.

நல்ல சொற்சுவை நிரம்பிய கவிதைகளைக் கொடியோர் சிலர் பழித்துத் தூற்ற, அதனைக் கேட்டு மனம் வெதும்பிய ஒளவையார், இந்தச் செய்யுளைச் சொல்லுகின்றார்.