பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

113


'உலகில் மணமுள்ள தாமரை மலரும் இருக்கிறது; ஒதுக்கத் தகுந்த மலரும் உள்ளது. வண்டு தாமரையின் தேனை விரும்பிச் செல்லுகிறது. ஈயோ மலத்தை நாடி ஓடுகிறது.

இரசிகர்களிலும் வண்டைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நல்ல பாடல்களின் அமைதிகளை அறிந்தவர்கள். நல்ல கவிஞர்கள் சொல்லும் பாடல்களின் சொற்சுவை பொருட்களை நாடி அடைந்து அவர்கள் இன்புறுவார்கள்.

ஈயைப் போன்றவர்கள் புல்லறிவு கொண்டவர்கள். அவர்கள் மட்டமான சொற்களையே நாடி இன்புறுவார்கள்.

இதனால் கவிஞர்கள், உயரிய பண்பு உடையவர்கள் உவக்கும்படியான பாடல்களையே சொல்லுதல் வேண்டும். புல்லறிவினர் பாராட்டினை ஒதுக்குதல் வேண்டும் என்றனர்.

இலக்கணக் கவிஞர்சொல் இன்பம் தேடுவர்
மலக்குசொற் றேடுவர் வன்க ணாளர்கள்
நிலத்துறுங் கமலத்தை நேரும் வண்டதீ
தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்.

"பாடல்களின் இலக்கணத்தை அறிந்த கவிஞர்கள் சொல்லினிமையினைத் தேடுவார்கள்; புல்லறிவினரோ கலக்க முண்டாக்கும் சொற்களைத் தேடுவார்கள். இது உலகிலுள்ள தாமரைமலரை வண்டு விரும்பியடைவதனையும், ஈ மலத்தினைச் சென்றடைதலையும் போன்றதாகும்" என்பது பொருள்.

பாடலைச் செய்பவரின் தன்மையினைக் குறித்துச் சொன்னதாகவும் இதனைக் கொள்ளலாம். ஒட்டக்கூத்தரைப் பழித்து உரைத்ததாகவும் இதனைச் சிலர் உரைப்பார்கள்.

85. ஏற்பித்தானே!

ரு சமயம் பாண்டியன் மிக வலிமையுடன் விளங்கினான். கொற்கைத் துறையினின்று வஞ்சிவரைக்கும் அவனுடைய ஆதிக்க எல்லை பரவியிருந்தது. அவனுடைய விருந்தினராக ஒளவையார் சிலகாலம் தங்கியிருந்தார். அவன் அவரை மிகவும் அன்புடன் உபசரித்துப் போற்றினான். பின்னர், அவனிடம் விடைபெற்றவ ராகத் தம்முடைய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஒளவையார்.

கால்நடையாகவே அவர் நடந்தார். வழியிடையில் மக்கள் படுகின்ற துயரம் அவரை வாட்டியது. உணவுக்கு எவரிடமாவது கேட்பார், அங்கே கஞ்சியும் கூழுமே அவருக்குக் கிடைத்தன.