பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர் கேசிகன்

115



87. தமிழ் உடையது!

ரு சமயம் பாண்டியனைக் கண்டார் ஒளவையார். 'அம்பர்' என்னுமிடத்திலிருந்து, 'சித்தன் வாழ்வு' என்னும் இடத்தையும் பார்த்தவராக அவர் சென்றிருந்தார். அப்போது அம்பர், சித்தன் வாழ்வு, பாண்டிய நாடு ஆகிய மூன்றையும் சிறப்பித்து ஒளவையார் பாடிய பாடல் இதுவாகும்.

நல்லம்பர் நல்ல குடியுடைத்து; சித்தன்வாழ்வு
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்.

"நன்மையுடைய அம்பர் என்னுமூர் நலமாக வாழும் குடிகளை உடையதாம்; சித்தன்வாழ்வு என்னும் ஊரோ வீடு தோறும் அந்தணர்களால் காக்கப்படும் முத் தீயினை உடைய தாகும். நன்மை தரும் ஒலியின்பம் என்பது பாட்டிடத் தேயே உளதாகும்; சந்திரன் வழியிலே வந்த பாண்டியனே! நின்னுடைய நாடுதான் நல்ல தமிழ் வளத்தினை உடையதாகும்" என்பது பொருள்.

அம்பர் - அம்பர் மாகாளம் என வழங்கும் தலம். சித்தன் வாழ்வு - தென்பழனி.

88. ஆயர் குலம்!

யாரோ சிலர் ஆயர் குலத்தினைக் குறித்துச் சற்று இழிவாகப் பேசியிருக்கிறார்கள் போலும்! அவர்களும் வைணவர்கள்தாம். எனினும், தாம் உயர்வானவர் என்ற செருக்கு அவர்களை அப்படிப் பேசச் செய்திருக்கிறது.

அவர்கள் பேச்சினைக் கேட்டார் ஒளவையார். அவர்கட்கு அறிவு தெளிவிக்கக் கருதியவராக இந்தச் செய்யுளைச் சொன்னார்.

மெய்வந்த கோவலர் தங்குலத் தாரை வெறுங்குலத்தோர்
கைவந்த நஞ்சொலின் வாய்வெந் திடுமந்தக் காரணங்கேள்
ஐவந்த வேள்வியில் ஐவர்க்குத் தெய்வமும் ஆகிநின்ற
தெய்வம் பிறந்த குலங்காணும் நந்தன் திருக்குலமே!

"உண்மை நெறியிலே வந்த கோவலர்களுடைய குலத்தினரை, அந்தச் சிறப்பில்லாத சில குலத்தவர்கள் வாய்க்கு வந்தபடி பழிசொன்னால், அப்படிச் சொன்னவர்களின் வாய்கள் வெந்துபோம். காரணத்தைக் கேட்பாயாக, அவர்கள் நந்த கோபனின் குலத்தினர்கள். சிறப்பமைந்த இராஜசூய வேள்வியிலே, பஞ்சபாண்டவர்க்குத் தெய்வமாக விளங்குகின்ற கண்ணபிரான் பிறந்த குலமாகும் அந்தக் குலம்" என்பது பொருள்.