பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

117



புள்வேளுர் என்றொரு ஊரில் பூதன் என்பவன் இருந்தான். வந்தவர்களுக்கு வாரி வழங்கிச் சிறந்திருந்தான். அவனால் உபசரிக்கப்பெற்று இன்புற்றவர் ஒளவையார். அவனுடைய அந்தச் சோற்றுக்கொடையின் நினைவு எழுந்தது. அவனுடைய ஊர் அழகிய தாமரை மலர்கள் செறிந்த குளங்களாற் சூழப்பெற்ற வளம் உடையது என்பதனையும் நினைத்தார்.

அந்தப் புள்வேளுரிடத்தே பால்போன்று இனிதான நீருடன் வருகின்ற பெண்ணையாற்றினையும் உளங்கொண்டார். 'உலகுக்கு உறும் பசியினைப் போக்கும் ஆற்றையும் பூதனையும் இவ்விடத்தே மறக்கச் செய்தாய் அதிகமானே’ என்று வாழ்த்தினார். 'வலிதான கூற்றினையும் என் உயிரைப் பற்றி வருவதற்கு ஏவுவதற்கு இல்லாது நின் செயலால் நாக்கை அறுப்பித்தாய்’ என்றும் போற்றினார். அந்தச் செய்யுள் இது.

பூங்கமல வாவிசூழ் புள்வேளுர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கு
மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றின் நாவை
அறுப்பித்தாய் யாமலகந் தந்து.

"வாளாற்றல் மிக்க அதிகமானே! இவ்விடத்தே கரு நெல்லிக்கனி தந்தாய். வன்மையுடைய கூற்றினது நாவையும் அதன்மூலம் அறுந்துபோகச் செய்தாய். அழகிய தாமரைத் தடாகங்கள் சூழ்ந்த புள்ளுரின்கண் இருந்து சோறுட்டு நடத்தி வரும் பூதனையும், இனிதான நீருடன் அவ்விடத்தே வருகின்ற பெண்ணையாற்றினையும் மறக்குமாறு செய்துவிட்டாய் (நீ வாழ்க)" என்பது பொருள்.

91. வாழைத் தோற்றம்!

வையார் ஒரு சமயம் திருக்குடந்தை நகருக்குச் சென்றிந்தார். அங்குச் செல்வனான ஓர் உலோபி இருந்தான். ஈயாத அவனுடைய தன்மைக்கு இரங்கினார் அவர். அதே ஊரில் வந்தவர்க்கெல்லாம் இல்லையென்னாது உணவளித்து உவக்கின்ற பண்பாளன் ஒருவனும் இருந்தான். ஒளவையாரை வரவேற்று அவன் விருந்துட்டி இன்புற்றான்.

இந்த இருவரின் தன்மைகளையும் ஒளவையார் நினைத்துக் கொண்டார். அவர்கள் வீட்டின் முற்றத்தே நின்றிருந்த வாழை மரங்களையும் கண்டார். இவ்வாறு பாடுகின்றார்.

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்
மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும்
இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும்
உலகில் வருவிருந்தோ டுண்டு.