பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஔவையார் தனிப்பாடல்கள்



“செல்வம் குறையாது தங்கியிருக்கும் அந்த உலோபியின் வீட்டு வாழை மரம் இனிதான பழக்குலையுடன் நிற்கின்றது. திருக்குடந்தை நகரிலுள்ள மருதன் என்பானுடைய வாழையிலோ குருத்தும் இல்லை, இலையுமில்லை, பூவுமில்லை; காயும் இல்லை. உலகில் எந்நாளும் வருகின்ற விருந்தினரோடு அவன் உண்ட தன்மையினால் அது எப்படி விளங்கும்; (எனினும் அதுவே சிறந்தது)” என்பது பொருள்.

92. கொதிக்கும் அருஞ்சுரம்!

வேல் அசதி என்பவன் யாதவர் குலத்தினன். அந் நாளையிற் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். 'ஐவேல்' அவன் தாங்கிய அழகிய வேற்படையினைக் குறிக்கும் எனவும் சொல்வார்கள். வேற்போரில் வல்லவனாக இருந்த அவனை 'ஐவேல் அசதி' என அனைவரும் குறிப்பிட்டு வழங்கினர்.

அவனுடைய அன்பின் சிறப்பினையும், பண்பின் நலத்தினையும் கண்ட ஒளவையார், அவன்மீது ஒரு கோவைப் பிரபந்தமே பாடினார். அந்தப் பாடல்களுள் மறைந்தனபோக எஞ்சிக் கிடைத்த பாடல்கள் இவை. ‘செந்தமிழ்’ என்னும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் திங்களிதழில் இவை முன்னர் வெளிவந்தன. தமிழ்ச் சுவையுள்ள அவற்றை இங்கே காண்போம்.

ஒரு தாய், தன் மகள் காதலனுடன் கூடியவளாகத் தன் வீட்டைவிட்டுப் போய்விட்டதனை அறிந்து வேதனைப் படுகின்றாள். தன் மகள் கடந்துபோவதற்குரிய வழியின் கொடுமை அவள் நினைவில் எழுகின்றது; அந்தத் துறையிலே அமைந்த செய்யுள் இது.

அற்றாரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேல்
முற்றா முகிழ்முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே.

"முத்தமிழ் நூற்களையும் கற்றிருந்த சான்றோருடன் பழகினவாக்கு, அவருடைய பிரிவின் வெம்மையைப் பொறுத்தல் இயலாது. கல்லாதவர் கூட்டத்துச் சீக்கிய கற்றவர்க்கு அதன் வெம்மையைச் சகித்தல் இயலாது. கைப்பொருள் இல்லாத ஒருவன் இளமைப் பருவத்தினனாகவும் இருந்துவிட்டால், அதனால் தாங்க முடியாத வேதனைகளுக்கு உள்ளாவான். இவர்களுடைய வேதனையைப் போலக் கொதிப்பது கடத்தற்கு அரிதான சுரநெறி. கதியற்றவரைத் தாங்கிப் பேணும் ஐவேலசதியின் அழகிய மலைநாட்டின்மேல் வாழும் முற்றாத முகிழ்த்த முலையுடையவளான என் மகளும், எவ்வாறு தன்