பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

119


காதலனான அவனுடன் அந்நெறியைக் கடந்து சென்றனளோ?” என்பது பொருள்.

93. பெண் பிறந்தேன்!

ர் இளங் கன்னி, தன்னுடைய மனங்கவர்ந்த காளையுடன் களவுறவு பூண்டு இன்புற்று ஒழுகிவந்தனள். அவன் விரைவில் பொருள்தேடி வந்து அவளை முறைப்படி மணந்து கொள்வதாகக் கூறி வேற்றுநாடு சென்றிருந்தான். அவனுடைய பிரிவால் அவள் பட்ட வேதனை சொல்லுந்தரமன்று. அவளுடைய புலம்பலாக அமைந்த செய்யுள் இது.

அருஞ்சஞ் சலங்கொண்ட வைவேல் லசதி யகல்வரையின்
இருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென
தன்னைமொழி
தருஞ்சஞ் சலமுந் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும்
பெருஞ் சஞ்சலங்கொண்டு யானிருந் தேனொரு
பெண்பிறந்தே.

“அற்றாரைக் காப்பவன் ஐவேலசதி. அதனால், அவனை நாடி வருபவரின் துயரங்களையெல்லாம் அவன் தன் துயரமாகக் கொண்டு வருந்துவான். இப்படி நாளும் அரிதான கவலைகள் பலவும் கொண்டு விளங்கும் அவனுடைய அகன்ற மலை யிடத்தே வாழ்பவள் நான். ஆகவே, யானும் கொண்ட பெரி தான துயரக் கதையினை எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ?

என் அன்னையின் கடுமையான பேச்சுக்கள் தருகின்ற மனக்கவலை ஒருபுறமும், என்னைத் தனியே வைத்துப் போனவர் வராததால் ஏற்பட்ட மனக்கவலை ஒரு புறமுமாகப் பெரிதான கவலை கொண்டவளாக, யான் இன்னமும் ஒரு பெண்ணாகப் பிறந்தும் சாகாது உயிர் வாழ்ந்திருக்கின்றேனே? அதுதான் எனக்கு வேதனையாய் இருப்பது” என்பது பொருள்.

சஞ்சலம் - மனக்கவலை.

94. வெட்டுண்டன!

ளைஞன் ஒருவன் தன்னுடைய உளங்கவர்ந்த நங்கை நல்லாளைக் காணும் பொருட்டாகக் குறித்த இடத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான். செல்லும் வழியில், தென்னையிலிருந்து இளநீர்க் காய்களைப் பறித்து வெட்டிக் குடித்துக் களித்தான். அவன் மனக்கண்முன் அவன் காதலியின் தனபாரங்கள் அப்போது எழுந்தன. அவன், அந்த மயக்கிலே தன்னுட் சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் இது.