பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஔவையார் தனிப்பாடல்கள்


போன்ற மூக்கும், என்பால் தம் தொழில் வரிசையைக் காட்டும் வேல் போன்ற கண்களும், சிலை போன்ற புருவமும், கொல்லுந் தன்மையுடைய யானையின் மத்தகங்கள் போன்ற தன பாரங்களும், தேர் போன்ற அல்குல் தடமும் கொண்டவளே!

இவை அனைத்தும் இருந்தும், கரும்பு வில்லியான காமனுடைய இந்தப் போராட்டத்திலே, எதிர்நின்று வெற்றி கொள்ளாமல், புறமுதுகிட்டு ஒதுங்குதல் நினக்குத் தகுதியாகுமோ?” என்றான்.

‘வேற்படையும், வில்லும், களிறும், தேரும் கைக்கொண்டிருந்து பூசலில் புறங்காட்டலாமே?' என அவளைப் புகழ்ந்து கூறிக் களிப்புறச் செய்து, அவளைத் தெளிவிக்கின்றான் அக் காதலன்.

97. விலக்குதல் அரிது!

ரு காதலன், தன்னுடைய காதலியின் நோக்கினிற்பட்டுத் தன் காமமிகுந்து செயலிழந்து நின்ற நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.

ஆலவட்டம் போன்ற முழுநிலவு தங்கியிருக்கும் அழகிய மலைப் பகுதிக்கு உரியவன் ஐவேல் அசதி என்பவன். அவனுடைய மலைச்சாரலில்.

நீலவட்டம் போன்று விளங்கும் கண்கள் நேராக ஒத்து நோக்குகின்ற அந்த நேரத்தில், அந்த நேரிய இழைகளை அணிந்த அவள்...

என்பால் மயக்கத்தை எழச்செய்து என் மனத்தைச் சுழலவும் செய்தனள். பின் என்னிடமிருந்து தான் வட்டமிட்டு ஓடவும் செய்தனள். மீளவும் என்னைத் தானிருந்த இடத்திற்கே வரவழைக்கவும் செய்தனள்.

இன்றும் அவள் தன் வேல்போன்ற கண்களை என்பால் செலுத்தி என்னை வெட்டுவாளானால், என்னால் அதற்கு இலக்காகி அழிவதன்றி, அதனைத் தடுத்து வெற்றி பெறுதல் அரிதாயிருக்குமே?” என்பது பொருள்.

ஆலவட் டப்பிறை யைவே லசதி யணிவரைமேல்
நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து
வேலைவிட் டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே.

ஆலவட்டம் - ஒருவகை விசிறி. மால் - மையல், வேல் வேல் முனை போன்ற கண்கள். விலக்கல் - தடுத்து நீக்கல்.