பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

123



98. நிலவு புறப்பட்டது!

ரு காதலன் தன் மனங்கவர்ந்த நேரிழையாளைக் கண்டு மயங்கினும், அவள் இசைவும் உறவும் அடையப்பெறாது நாளும் வருந்தி நலிந்தான். அவளுக்கும் அவன்பாற் காதல் இருந்தாலும், அதனை வெளியிட்டு உறவினை மேற்கொள்ள நாணியவளாக, ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தாள்.

ஒருநாள் மாலையில், அவன் சுனைக்கு நீராடச் சென்றபோது, அவள் நீராடியபின் வீடுநோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாள். இருவரும் எதிரெதிராக நெருங்கி வந்தனர். மிகவும் நெருங்கியதும் நின்றனர். அவன் சிறிது நேரம் ஊமையாகி நின்றான். அவள் தலைகவிழ்ந்து கால்விரலால் தரையைக் கிளறினாள். அவன் துணிந்தான்; அவள் துவண்டாள். ஆனால் விடுபெற்றுப் புன்சிரிப்புடன் அவனைத் தழுவியபின் பிரிந்து போய்விட்டாள்.

அவன் இன்ப மயக்கத்தில் நின்றான். பொழுது சாய்ந்து நிலவும் வானத்தே எழுந்தது. அவன் காமமும் அதனால் மிகுதியாயிற்று.

அவள் புன்சிரிப்பும், தழுவிய தகைமையும், அவன் கண்முன் நின்றன. அவளை எப்படியும் தான் அடைய வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவர்கள் காதலுறவு கடிமணமாகவும் மலர்ந்தது. அதன்பின், ஒருநாள் நிலவில் அவர்கள் களித்திருக்கும் பொழுதில் அவன் தங்களின் அந்தச் சந்திப்பை நினைத்துக் கொள்ளுகின்றான். அவளுடன் அன்று தான் கொண்ட மனோவேகத்தையும் சொல்லி உவக்கின்றான்.

ஆரா யிரங்கொண்ட வைவே லசதி யகன்கிரியில்
நீராடப் போகும் நெறிதனி லேயந்தி நேரத்திலே
சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச்
சிரித்தொருபெண்
போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே.

"ஆத்தி மரங்கள் ஆயிரக்கணக்காக விளங்கும் ஐவேல் அசதியின் அகன்ற மலைச்சாரலிலே, நீராடப்போகும் வழியிலே, அந்திப்போதிலே, சிறப்புப் பொருந்திய குங்குமச் சிமிழ் போன்ற தன் மார்பகங்களைக் காட்டிச் சிரித்தபடியே ஒருபெண் போகின்றாள்; அவளைப் பிடித்துக்கொள் என்று தூண்டுவது போல, நிலவும் புறப்பட்டது" என்பது பொருள்.