பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஔவையார் தனிப்பாடல்கள்



அவன் மனம் பெரிதும் வேதனைப்பட்டது. “தாயே! அங்கு கூடியிருப்போர் அனைவரும், உங்கள் அதியனுக்கு எதிராகச் சதி செய்தபடியே இருக்கின்றனர். அங்கு நீங்கள் செல்வது முறையாகாது. ஒருவேளை தங்கட்கே அதனால் இடையூறு உண்டாதலும் கூடும்” என்றான் அவன்.


ஒளவையார் சிரித்தார். யான் தமிழன்னைக்குத் தொண்டாற்றிவரும் ஓர் ஏழைப் பாண்மகள். உங்கள் பகையையும் உறவையும் பற்றி எனக்கேன் கவலை? ஏதோ எல்லாரும் பகையை மறந்து நட்புறவோடு பழகினால் நல்லது என்பது இந்த முதியவளின் கருத்து, உங்கள் இளமையும் அரச நிலையும் இந்தக் கருத்தை ஏற்காதென்பதும் எனக்குத் தெரியும். ஆனால், என் கடமை, நான் சொல்ல வேண்டியது. நீ நலமாகச் சென்று வருக! யானும் சென்று வருகின்றேன்” என்றார் ஒளவையார்.

ஒளவையார் தம்முடைய நடையைத் தொடர்ந்தார். அந்தச் சதி செய்வோர் இருக்கும் இடத்தையும் அடைந்தார்.

ஒளவையாரைக் கண்டதும் அவர்கள் திடுக்கிட்டனர். அவர்கள்பால் அச்சம் நிரம்பியது. தங்களுடைய சதியை ஒளவையார் அதியனிடம் வெளியிட்டால், தமக்கு அழிவு உறுதி என்பதை உணர்ந்தனர். அதனால், பேச்சை மாற்றத் தொடங்கினர். “வருக! பெருமாட்டியே! தமிழ் வளர்ச்சிக்குக் கூட்டாக முயலுவது பற்றி எண்ணமிட்டுச் செயலாற்றுவதைக் கருதியே, யாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம். இவ் வேளையிலே தமிழ்த் தெய்வமே வந்து தோன்றி, எங்கட்கு வாழ்த்து உரைப்பதுபோலத் தாங்களே நேரில் வந்துள்ளீர்கள். தங்கள் அறவுரை எங்கட்கு வழிகாட்டுமாக" என்றான் ஒருவன்.

“உங்களுடைய பேச்சு மிகவும் நன்றுதான். ஆனால், உங்களுடைய பேச்சு உங்களது உள்ளத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லையே? எப்படியோ, நல்லதற்கோ கெட்டதற்கோ, நீங்கள் ஒன்றுகூடி இருக்கின்றீர்கள். அதுவே சிறப்பானதுதான்.”

மேலும் நீங்கள் அதியனின் பகைவர் என்பதும் எனக்குத் தெரிந்ததே ஆகவே ஒன்று சொல்வேன், கேட்பீராக:

"ஒரு தச்சன், தேர்த் தொழிலிலே பேராற்றலுடையவன். ஒரு நாளைக்குள் எட்டுத் தேர்களைச் செய்து விடுவான். அவன் நுட்பமாக ஒரு தேரைச்சமைக்கக் கருதினான்.ஒரு திங்கள் முழுதும் வேலை செய்தான். ஒரு தேர்க்கால்தான் அவனுடைய கருத்துப்படி வேலை முடிந்திருந்தது.