பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஔவையார் தனிப்பாடல்கள்



இவனோ பிற வரிசை மரபுகளை அறிந்தவன், அங்ஙனம் அறிதலால், தன்னுடைய உயர்ச்சியையும் ஆராய்ந்தவனாக, பெரிய பாலை நிலம் சூழ்ந்த குன்றத்தைப் போன்றதான, பெரிதான களிறு ஒன்றினை எனக்கு அளித்தான்.

இப்படிப்பட்டதொரு தெளிவில்லாத ஈகையும் உளதாமோ? பெரியோர்தம் கடனை முறைப்படச் செய்தலைப் போற்ற மாட்டாரோ?

தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினெம் ஆகத், தான்பிற
வரிசை அறிதலால், தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளது கொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே!

நாஞ்சில் வள்ளுவனின் பெருமிதம் இந்தச் செய்யுளால் நிலைபெறுகின்றது. ஒளவையாரின் உள்ளச்செவ்வியும் இதனாற் புலனாகின்றது.

கேட்பவர், தமது சிறிய அளவான தேவை நிறைவேறினாற் போதுமென்று நினைக்கலாம். ஆனால், கொடுப்பவரின் நினைவு வேறு. அது அவர்களின் தகுதியோடு ஒட்டியது. அந்தத் தகுதியை அறிந்துதான், அதற்கேற்றபடிதான், அவர்கள் வழங்கு கின்றனர்; வழங்குதல் வேண்டும். இந்த உண்மையை ஒளவையார் இச் செய்யுளால் நிலைபெறுத்துகின்றார்.

111. நல்ல நாடு!

து நல்ல நாடாக விளங்கும்? நல்ல நாடு என்ற பெருமையைப் பெற வேண்டுமானால் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்!

மிகவும் சிக்கலான கேள்வி இது.

மிகவும் சிந்திக்க வேண்டிய கேள்வியும் இது.

ஆழமாக நுணுகி ஆராய்வதற்குரியதும் இது.

'பொருள் நிலையிலே வளமான நாடுதான் நல்ல நாடு’

'தொழில் வளம் சிறந்த நாடுதான் நல்ல நாடு'