பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஔவையார் தனிப்பாடல்கள்



கைலைக்கு வந்ததும், தங்களுக்கும் முன்பாக அங்கே வந்ததிருந்த ஒளவையாரைக் கண்டு வியப்புற்றனர். அந்த வியப்பினைச் சேரமானால் கட்டுப்படுத்த முடியவில்லை!

‘எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ? என்று கேட்டான் அவன். அப்போது, அவனுக்கு ஒளவையார் சொன்னதாக வழங்குவது இந்தச் செய்யுள்.

மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை
முதிரநினை யவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிரவருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

"சேரர் குடியாகிய உயர்குடியிலே தோன்றிய மன்னனே! இனிதான சொற்களைக் கூறுகின்ற நன்மையைத் தருகின்ற உமையம்மையின் குமாரன் விநாயகப் பெருமான். அவனுடைய திருவடித் தாமரைகளை அழுத்தமாக நினைந்து தமக்குரிய பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வல்லமையுடையவர் யாம். எமக்கு, நுமக்கு முன்பாக இவ்விடம் வந்து சேர்தலும் அரிதாகுமோ? மேகத்தின் இடிமுழக்கத்தினைப்போல முழங்கிக் கொண்டு, தாம் நடக்கும் நிலமும் அதிரும்படியாக வருவன், நீங்கள் வந்த யானையும், தேரும், அதன் பின்னாகவே வந்து கொண்டிருந்த குதிரையும் எல்லாம். அவை நாழிகைக்குக் காதவழி நடந்தால், வழி நடக்கவியலாத இந்தக் கிழவியும், கணபதி கருணையால் காதவழி கடந்துவிடுவாள் என்பதனை அறிவாயாக" என்பது பொருள்.

'முதிர நினைய வல்லார்க்கு' என்றதால், அவர்களிடம் அத்தகைய அன்பின் முதிர்ச்சி நிலைபெறவில்லை என்றும், அதனாலேயே அவர்கள் தாம் முன்னாக வந்ததற்கு வியந்தனர் என்றும் கூறினார். பக்திமையில் தம்மை முற்றவும் இழந்த தனிநிலையே சிறந்த பெருநிலை என்பதைக் காட்டுவது இதுவாகும்.

'இறையருள் எதனையும் எளிதாக அடைவிக்கும்' என்ற கருத்தும் இச் செய்யுளால் வலுப்பெறும்.

3. இடம் எங்கே?

ந்த நாளிலே சோழன் பெரிதும் தமிழார்வம் உடையவனாக இருந்தான். கம்பர், புகழேந்தியார், செயங்கொண்டார், ஒட்டக் கூத்தர் ஆகிய பல புலவர்மணிகள் - அவன் அவையில் இருந்தனர். அவன் அவை, மீண்டும் ஒரு தமிழ்ச்சங்கம் உருவானதுபோலத் தமிழ் நலத்தால் மாண்புற்று விளங்கியது.