பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

5



ஒரு சமயம், அந்தச் சோழன் சோலைவளம் கண்டு மகிழ்வதற்காகச் சென்றான். அங்கே, காவிரிக்கரையோரத்தில் ஒரு சங்கு வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கியபடி இருக்கக் கண்டதும் அவன் வியப்புற்றான். அப்போது கரையோரத்து, மரத்தின் பூக்களிலிருந்து ஒரு துளி தேன் அதன் வாயில் கொட்டிற்று. அவன் உள்ளம் அதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தது.

இயற்கையின் கருணையாகிய அரிய ஆற்றல் அவனுக்குப் புலனாயிற்று; அனைத்தையும் பேணிக் காக்கின்ற பேராற்றலின் உயர்வை உளங்கொண்டு போற்றினான். அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினையும் வீழச்செய்து இன்புறுத்திய பெருங்கருணை அவனை ஆட்கொண்டது. அந்த நினைவிலே திளைத்தவனாகத் தன் அரண்மனைக்குச் சென்றான். இரவெல்லாம் அந்தக் காட்சி அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை.

மறுநாட்பொழுதும் விடிந்தது. சோழனின் நாளோலக்க அவையும் கூடிற்று. மன்னன் அவைநாயகனாக அமர்ந்திருந்தான். புலவர்களும் அமைச்சர்களும் தளபதியருமாக அனைவரும் அங்கே ஒருங்கே திரளாகக் கூடியிருந்தனர்.

அப்பொழுது ஒளவையார் சோழனின் அவையுள் மெல்ல நடந்து வந்தார். அவரைக் கண்டதும் 'வருக!' என்று வரவேற்றான் மன்னன். 'அமர்க' எனவும் சொன்னான். ஆனால் அங்கே அமர்வதற்கு இருக்கை எதுவும் இல்லாததனைக் கவனிக்கவில்லை; அதுபற்றி எவரும் கவலைப்படவுமில்லை.

ஒளவையாரோ நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்தவர்; பல நாட்களாக நடந்து சோர்ந்து போயிருந்தவர்; சோழனைக் காணவேண்டுமென்ற ஆர்வத்தின் மிகுதியினாலே தம் களைப்பையும் மறந்து உடனே சென்றவர். அவரை அவன் முறையாகக் கவனிக்காது, எவரையோ வரவேற்பதுபோல 'வருக அமர்க!' என்று சொன்னது அவருக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது.

கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
யான்வந்த தூரம் எளிதன்று - கூனல்
கருந்தேனுக் கங்காந்த காவிரிசூழ் நாடா
இருந்தேனுக் கெங்கே இடம்?

என்று பாடினார் அவர்.