பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஔவையார் தனிப்பாடல்கள்


வடு பெறற்கரிய பேறாகக் கருதி மதிக்கவும் படும்.வடுப்பட்ட உடல் என்னாது அதனை அழகியதாகக் கருதுவதே சான்றோர் இயல்பு.

பொது நன்மைக்காகப் போராடுகிறார்கள் சிலர். அவர்களின் போராட்டத்தில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால், அவர்களுள் சிலர் களத்தில் உயிர் இழக்கின்றனர். அவர் நினைவாக அவர்களுடைய பீடும் பெயரும் பொறித்த நடுகற்கள் நிறுத்தப் பெறுகின்றன. தம் உயிரை தம்முடைய இன நன்மைக்கு ஈந்தவரின் நினைவாகிய அந் நடுகற்கள், அந்த இனத்தவர் உள்ளவரை, அவர்கட்கு மிகவும் அழகியதாகவே விளங்கும்.

இவ்வாறு அழகு அவரவர் பண்புச் செவ்வியாலேயே அமையும்."அழகெனப் பொதுப்பட்ட ஒன்றைக் கவர்ச்சி இனிமை கருதிமட்டும் கூறுதல் பொருந்தாது. இதனை அறிவாயாக" என்றனர் ஒளவையார். அந்த வெண்பா இது.

சுரதந் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதந் தனில்இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்அபிரா மம்.

“நாயகனோடு கூடி இயற்றிய சுரத அநுபவத்தாலே களைத்திருக்கின்ற நாயகியும், நன்மைதரும் விரதங்களை மேற்கொண்டதனால் இளைத்த பக்தரின் மேனியும், எக்காலமும் வறியவருக்குக் கொடுத்துக் கொடுத்துத் தன் செல்வம் இழந்து போன கொடையாளியும், கொடுமையான போரினிடத்தே பெற்ற வீரனின் வடுக்களும், பீடும் புகழும் குறித்துப் போரில் வீழ்ந்தோருக்கு நாட்டப்பெற்ற நடுகல்லும், சான்றோர் போற்றும் அழகான பொருள்களாகும்” என்பது பொருள்.

இதனால், ஒன்று அழகியதாகக் கொள்ளப்படுவது, அதனைக் கொள்பவரின் மனநிலையினை ஒட்டியும், செய்தவரின் சால்பினைக் கருதியும் அமைவதாகும் என்ற உண்மை விளங்கும்.

9. நல்காத செல்வம்!

செல்வம் சிலரிடம் தானாகவே சேருகின்றது. பலரிடம் முயற்சியின் அளவாலே தொழில் பெரிதானாலும்கூடச் செல்வம் மிகுதியாக வந்து சேர்வது இல்லை. செல்வத்தின் இத்தகைய நிலையினை நம் முன்னோர்கள் உணர்ந்தவர்கள்.

இதனால், செல்வம் சேர்வது பிறருக்குக் கொடுத்து அவரையும் நல்வாழ்வினராகச் செய்வதற்கே என்பதனை அவர்கள் வற்புறுத்தினர். கொடுக்கும் பண்பு சிறந்த மனிதப் பண்பாகவும் ஆயிற்று. கொடுப்பவரினும், மேம்பட்ட வள்ளல்களாகப் பலர் இருந்தனர்.