பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஔவையார் தனிப்பாடல்கள்



ஒளவையாரின் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. சோழனும் மகிழ்ந்து அவரைப் போற்றினான்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்.

“நம் பெருமானான சிவனின் அடியவர்களுக்கு மனமுவந்து வழங்காத செல்வங்கள், சூனிய வித்தைகட்கும், பேய் வழிபாடுகட்கும், பரத்தையர்களுக்குக் கொடுத்தற்கும், வீண் செயல்களுக்கும், கொள்ளை கொடுத்தற்கும், மதுவுக்கும், பகை அரசரால் பறிமுதல் செய்யப்படுவதற்கும், அவனுடைய சாவுச் செலவிற்கும், கள்வரால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும், நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்குமே உரியவாகும்” என்பது பொருள்.

அடியார் உலக நலம் கருதுபவர். உலகம் உய்வதற்குப் பாடுபடும் உயர்ந்தோருக்கு உதவுவது மிக உயர்வுடையதாகும் என்பது கருத்து.

சிறந்த செயலைச் செய்பவர்க்கு உதவாதவர்களின் மனநிலை இழிந்ததாகவே இருக்கும். அதனால்தான் அவர்களின் செல்வம் பல வழிகளிலும் பாழாகும் என்கிறார்.

சிவ காரியங்களுக்குப் பயன்படுத்தாத செல்வம் அவகாரியங்களிலே வீணாகிக் கரையும் என்பதும் இது.

10. பண்டுபோல் நிற்க!

ந்நாளில், ஒருவன் இரண்டு மனைவியரை மணஞ்செய்து கொள்ளல் இயலாது. சட்டப்படி இது தடை செய்யப்பட்டுவிட்டது. முன்காலத்தில் அப்படியில்லை. இரண்டு மூன்று மனைவியரை ஒருவன் மணந்து கொள்வது என்பது மிகவும் சாதாரண நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

அக் காலத்தில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. கட்டுடல் கொண்ட காளையர்கள் பலர் போர்க்களத்தில் வீழ்ந்துபட்டனர்.

இதனால் பெண்கள் மிகப் பெருக்கமாக இருந்தனர். ஒருவனுக்கு இருவர் மூவர் என்பதும், அதனால் சமுதாயத்தின் மரபாகவே விளங்கிற்று.

அந்த நாளிலே, ஒரு குறவன் இரண்டு மனைவியரை மணந்து கொண்டிருந்தான். மூத்தவட்குக் குழந்தையில்லாமற் போனதே இரண்டாமவளை அவன் மணந்ததற்குக் காரணமாக இருந்தது.