பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஔவையார் தனிப்பாடல்கள்


கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார்.

அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். “அம்மையே! உங்களுக்குக் கடுமையான பசியென்பதனை நான் அறிவேன். ஏதோ அவள் குணம் அப்படி என்று கருதி விட்டுத் தள்ளுங்கள். அதற்காக நீங்கள் உண்ணாமற்போவது கூடாது" என்று மிக வேண்டினான்.

“தம்பி! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே நாணம் கொள்ளுகின்றேன். என் வாய் தமிழ் பாடிப் பெருமை பெற்றது. அந்த உணவை ஏற்கத் திறக்க மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்வேன்?”

“என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்றும் கூறினார்.

அவன் மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்டவன். அதனால் மீண்டும் மன்றாடினான். அப்போது, அவர் வாயினின்றும் எழுந்த செய்யுள் இது.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.

"ஐயையோ! அன்பில்லாத நின் மனையாள் இட்ட அமுது அது! அதனைக் காணவும் கண்கள் கூசுகின்றன! கையால் எடுக்கவும் வெட்கமாகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் பற்றி எரிகின்றது” என்பது செய்யுளின் பொருள்.

செய்யுளை இரண்டு முறை படியுங்கள். ஒளவையாரின் உள்ளக் கொதிப்பு நமக்கே புலனாகும். பெண்பாலரான அவர், பெண்களின்பால் அதிக அன்புடையவர்தாம். எனினும், பெண்ணுருவில் அந்த மனையுள் பேய் இருப்பதனைக் கண்டதும் கொதிப்படைந்தார்.

அன்போடு அளிக்கும் கூழையும் வியந்து உண்டு பாராட்டும் அந்தக் கனிவான உள்ளமும் கனன்றது. அதனை நோக்கினால், அந்தக் கொடியவளின் தன்மை நமக்குத் தெளிவுபடும்.

'மாணொக்க வாய்'என்றது, தமிழ்ப்பாடும் புனிதமான வாய் என்பதனாலாகும்.