பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

25



“என் வாழ்வு கசந்துவிட்டது. இவளோடு வாழ்ந்து இதுவரை பட்ட பாடுகள் போதும். இனி, நான் இவளோடு ஒரு நொடியும் வாழ மாட்டேன். சந்நியாசம் ஏற்கப் போகின்றேன். என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான்.

பொதுவாக இல்லற வாழ்வில் இருப்பவன் ஒருவனைச் சந்நியாசம் கொள்ளத் தூண்டுவது முறையாகாது. 'அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை' என்ற ஆன்றோர் வாக்கினை அது மறுப்பதும் ஆகும். ஆனால், இங்கு உரைத்துள்ள கணவனின் நிலைமையோ முற்றிலும் வேறானது.

இன்பம் செழிக்க வேண்டிய வாழ்வில், துன்பம் பேய்க் கூத்தாடியது. அன்பு காட்ட வேண்டிய இல்லாள் அகங்காரியாக ஆட்டிப் படைத்தாள். ஆகவே, அவனுடைய முடிவிலும் நியாயம் இருந்தது. ஒளவையாரும் அதனை உணர்ந்தார். 'இல்லவள் மாட்சியில்லாதபோது அந்த வாழ்வில் உள்ளது என எதுவுமே இல்லையல்லவா?' அவனை அவர் மனப்பூர்வமாகவே ஆதரித்தார், ஆசீர்வதித்தார்.

பத்தாவுக் கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்
கூறாமற் சந்நியாசம் கொள்.

என்று அவன் முடிவை ஆதரித்துப் பாடினார் அவர்.

"கணவனுக்கு ஏற்றவளாக நடந்துகொள்ளும் கற்புடைய மனைவி கிடைத்திருந்தால், எந்த நிலையிலும், அவளோடு கூடி இல்வாழ்விலே ஒருவன் ஈடுபட்டிருக்கலாம். மனைவி கொஞ்சமேனும் முறைகேடு உள்ளவளாக இருந்தாளானால் எவரிடமும் கேளாமல் சந்நியாசம் கொள்வாயாக" என்பது பொருள்.

பதிவிரதை-பதியின் கருத்துக்கு இசைய நடப்பதனையே தான் மேற்கொள்ளும் விரதமாக உடையவள். எத்தாலும் எந்த நிலையிலும்; நிலையாவது வளமையும் வறுமையும் இன்பமும் துன்பமும். ஏறுமாறு முறைகேடு, பதிவிரதைத் தன்மைக்கு எதிரான வகையில் நடப்பது. 'கூறாமல்’ என்றது, பலரிடம் கூறினால், அதனால் மனவுறுதி தளர்ந்து விடுதலும் நேரலாம் என்பது பற்றி அவளிடம் எதுவும் பேசாமலும் ஆம்.