பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

37



"புகார் நகரத்தே இருந்து அரசியற்றும் மன்னவனே! பொன்னி நதிவளம் பெருக்கும் வளநாட்டிற்கு உரியவனே சோழ மன்னனே! பாரி மகளிர்க்குத் திருமணம் உறுதியாயிற்று. அதற்கு வருவது தகுதியுடையதன்று என்று கருதி, அங்கிருந்து நகையாடி இருந்துவிடாதே விரைந்து இன்றைக்குப் பதினெட்டாம் நாள் பொழுது விடிவதற்குள்ளாக காவலையுடைய கோவலூர்க்கு வருவாயாக" என்பது பொருள்.

இந்தச் செய்யுள், திருமணம், நாளோலை எழுதியதன் பின்னர் பதினெட்டாவது நாளில் நிகழ்ந்ததென்பதைக் காட்டு கின்றது. சேரனை ‘உட்காதே’ என்றவர், சோழனை 'நகாதே’ என்றனர். இதனால் அந்நாளில் சேரன் வலுக் குறைந்திருந்தான் என்பதும், சோழன் வலுவுடையவனாக இருந்தான் என்பதும் விளங்கும்.

24. பாண்டியன் வருக!

பாண்டியனும் சேர சோழரைப் போன்று பாரியைக் கொன்றதில் பங்கு கொண்டவன்தான். எனினும், பாரியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவன் உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டது. முறையற்ற ஒரு போரினை அறந்தவறாத பாண்டியர் குடிப்பிறந்த தான் நிகழ்த்தியதனை நினைந்து அவன் வருத்தம் கொண்டான். தன்னுடைய பிழையை உணர்ந்து வருந்தும் பெருந்தன்மை உடையவனாக விளங்கிய தென்னவனுக்கு, 'அதற்குப் பரிகாரமாக இப்பெண்களுக்குத் தருவதற்கான சீர்வரிசைகளுடன் வருவாயாக' என்று ஓலை விடுக்கின்றனர் ஒளவையார்.

வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே - தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள் ஈண்டு வருக வியைந்து.

"வையைத் துறைக்கு உரியவனே! மதுராபுரியில் இருந்து அரசியற்றும் தென்னவனே! பாரி மகளிருக்கு வேண்டிய சீர்வரிசைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு இன்றைக்குப் பதினெட்டாம் நாள் இங்கே அடையும்படியாக வந்து சேர்வாயாக செய்யத்தகாத செயல் என்று கலங்கி, வராதிருந்து விடாதே" என்பது பொருள்.

சேர, சோழரின்பால் எதுவும் கொணரப் பணிக்காதவர் பாண்டியனிடம் மட்டும் சீர்வரிசைகள் கொணருமாறு கேட்கின்றார். இதனைக் கவனிக்க வேண்டும். பாரியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பறம்பு நாடு பாண்டிய நாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அதனால் முறையாகப் பாண்டிய