பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஔவையார் தனிப்பாடல்கள்


சிறியவர்கள். சொல்லியுஞ் செய்யாதவர்கள் கயவர்கள். இவர்களுக்குச் சொல்லக் கூடிய உவமையினை ஆராய்ந்தால், பலாவையும் மாவையும் பாதிரியையும் பார்த்து அறிவாயாக" என்பது பொருள். குலாம் - குலவும், அசையும்.

இதனால், உள்ளன்புடன் உதவி செய்கிறவர்கள் பிறரின் துயரங் கண்டவிடத்து, தாமே வலியச் சென்று உதவுகிறவர்களாக விளங்குவார்கள் என்று அறிதல் வேண்டும். தலைவர்கள் தலைமை வகிக்கப் பரிசுதரும் விழாக்களும் நன்கொடை நிகழ்ச்சிகளும் நாடெல்லாம் இந் நாளில் நிகழ்கின்றன. இந்தச் செய்யுளின் பொருளோடு அவற்றையும் சேரக் கருதிப் பார்க்க வேண்டும். அந்த ஆரவாரத்தையும் நினக்க வேண்டும்.

32. என்றும் கிழியாது!

ரு சமயம், ஒளவையார் பல நல்ல செய்திகளைப் பற்றி விளங்க உரைத்துக் கொண்டிருந்தார். அவையினர் அனைவரும் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஒரு துணிவணிகன் அந்த அவைக்கு வந்தான். மிக அழகிய நூற்சேலைகளை அவன் கொண்டு வந்திருந்தான். எல்லாம் உயர்ந்த வேலைப்பாடு உடையவை. அவற்றின் கவர்ச்சியில் மன்னனும் மயங்கினான்.

சோழனுக்குத் தன் மனைவியான பாண்டியகுமாரிமீது அளவற்ற பேரன்பு உண்டு. அவளுக்கு எது பொருந்தும் என்ற நினைவிலே ஈடுபட்டு, அவன் ஒளவையாரின் சொற்களைக் கவனியாமலும் இருந்தான்.

ஒளவையார் அவன் நிலையைக் கண்டார். ஒருபக்கம் தன் பாடலையும் மறந்துவிடும் அளவிற்கு அவன்பால் அமைந்திருந்த மனைவியின் மீதுள்ள அன்பிற்கு உவந்தார். எனினும், அவனுடைய அந்தச் செயலை ஒட்டியதாக ஓர் உண்மையினை உரைக்கவும் விரும்பினார்.

“சோழனே! நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுகின்ற நூற்சேலையே ஆனாலும், அது நான்கு மாத காலத்திற்குள் நைந்து கிழிந்து போய்விடவே செய்யும். என் பாட்டு அங்ஙனம் நைந்து கிழிந்துபோகின்ற தன்மை உடையதன்று, என்றும் கிழியாத ஏற்றம் உடையது” என்றார்.

சோழன் தன்னுடைய செயலை உணர்ந்து நாணி நின்றான்.

அவன் நாணத்திலே அவனுடைய அழியாத தமிழார்வம் ஒளி செய்தது.