பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

47



நூற்றுப்பத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப்
பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு!

“பகைவர்களை அவர் இறந்து போகும்படியாகப் போர் செய்வதிலே வல்லமை உடைய பரந்த கைகளைக் கொண்ட களங்கமில்லாத மன்னவனே!

நூற்சீலையானது நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுமானம் உடையதேயானாலும், நான்கு மாத காலத்தில் அதன் அழகுக்கோப்பு நைந்து போய்விடும். ஆனால், என் பாட்டு என்றும் அழியாதது. இதனை அறிவாயாக” என்பது பொருள்.

தமிழ் மணக்கும் அந்தத் திருவாயினின்றும் எழுந்த உறுதி வீண் போகவில்லை. ஒளவையார் பாடல் இன்றும் தன் அழகிற் குறையவில்லை. காலம் அதனைக் கட்டழிக்கவில்லை. ஏற்றமுடன் அது இன்றும் நிலவுகிறது; என்றும் நிலவும்.

33. பூதனின் விருந்து!

‘பசி வந்திடப்பத்தும் பறந்துபோம்’. இது பழமொழி. இந்தப் பழமொழியின் அருமையினைப் பசியினால் துயரப்படுகிறவர்கள் தாம் நன்றாக அறிவார்கள். வயிற்றிலே பற்றி எரிகின்ற நெருப்பு உடலையும் உள்ளத்தையும் வாட்டுகின்ற வெம்மையினை அவர்களால்தான் உணர முடியும்.

ஒரு சமயம் ஒளவையார் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார். புல் வேளுர் என்னும் ஊரிடத்தே சென்றபோது, அவருடைய கால்நடை தளர்ந்துவிட்டது. பசியும் பற்றிக் கொண்டு வருத்தியது. சோர்ந்துபோய் ஒரு பக்கமாக அயர்ந்து இருந்துவிட்டார்.

அவ்வூரிலே ‘பூதன்’ என்ற ஒருவன் இருந்தான். அவன் பெரிய செல்வன் அல்லன். தனக்குரிய சிறுநிலத்திலே கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்தவன். உழைப்பிலே அவன் தளர்ச்சி கொள்வதில்லை. அதனால், அவனுக்கு உணவுப் பஞ்சமும் ஒருபோதும் வந்ததில்லை.

‘பூதன்’ நல்ல உள்ளம் உடையவன். ‘பசி’ என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு உணவு அளித்து வருவதில் தவறவே மாட்டான். அவன் மனைவியும் தன் நாயகனுக்கு எது விருப்பமோ அதனைத் தானும் உள்ளன்போடு விரும்புகின்ற இயல்பினள். அதனால், அவர்கள் வீட்டில் எப்போதும் உணவு உண்பவரின் ஆரவாரம் கேட்டவாறே இருக்கும்.