பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஔவையார் தனிப்பாடல்கள்



பூதன் வீட்டிற்கு ஒளவையார் சென்றார். அவன் அவரை அன்புடன் உபசரித்தான். அவன் மனைவி ஆர்வமுடன் உணவு படைத்தாள். அருகே அமர்ந்து பூதன் விசிறிக் கொண்டிருந்தான்.

ஒளவையாரின் உள்ளம் பெரிதும் உவப்படைந்தது. தம்மை யாவரென்று வினவுதலையுங்கூடக் கருதாமல், தம்மிடம் அன்பு காட்டும் அந்தத் தம்பதிகளை வியந்தார். உணவுண்டு கைகால் கழுவியபின், உண்ட களைப்புத் தீர்வதற்குச் சற்று உறங்குமாறு பூதன் சொன்னபோது, ஒளவையார் அவனைக் குறித்து அருமையான வெண்பா ஒன்றைச் சொன்னார்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே
புல்வேளுர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டான்ஈ(து) எல்லா வுலகும் பெறும்.

என்பது அந்தச் செய்யுள்.

"வரகரிசிச் சோற்றையும், வழுதுணங்காய் வதக்கலையும், முரமுரென்று புளித்திருந்த மோரையும், புல்வேளுர்ப் பூதன், உறுதியுடனே விரும்பியவனாக எனக்கு விருந்தாகப் படைத்தான். இந்த விருந்து எல்லா உலகங்களையும் தரக்கூடிய அளவிற்குச் சிறப்பு உடையதாகும்” என்பது பொருள்.

உணவு மிகவும் சாதாரணமானதுதான். அதை ஒரு விருந்து என்று சொல்வதற்குக்கூடச் சிலர் கூசுவார்கள். வரகு அரிசிச்சோறு, வழுதுணங்காய் வதக்கல்; மோர்; இவற்றை மிகவும் வியந்து பாடுகிறார் ஒளவையார்; அவருடைய உவப்பு, அதனை 'எல்லா உலகும் பெறும்' என்றுகூடச் சொல்லுமாறு செய்கின்றது. அந்த அளவுக்குப் பூதனின் அன்பான உபசாரம் இருந்ததென்பது இதன் விளக்கமாகும்.

34. நன்று எது?

ருவர் கொடையிலே புகழ்பெற்று விளங்கினர். ஒருவன் குறைவாகக் கொடுப்பவன்; மற்றையவன் வாரி வழங்கி வருபவன். வாரி வழங்கும் நல்ல பண்புடன் அவனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் உண்டு. தன்னிடம் வந்து இரந்து நிற்பாரைப் பிழைக்க ஏலாதவர்கள்; உழைக்க விரும்பாதவர்கள் என்று பலபடியாக வைத பின்னேயே கொடுப்பவன். இந்த இருவர் கொடையினும் சிறந்தது எது? நன்மை உடையது எது? ஏசிக்கொண்டு தருபவன்தான் சிறந்தவன், ஏசினாலும் பேசினாலும் தாராளமாகத் தருகிறான் அல்லவா? என்றனர் சிலர்.