பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஔவையார் தனிப்பாடல்கள்


பழியை மிகுப்பதைவிட, அவன் கொடாத கருமியாகப் போவதே நல்லது என்கின்றனர்.

அடுத்து, கணவன் மனைவியரின் கலந்த ஒருமை வாழ்வினை எடுத்துக் கொள்கின்றார். மனைவி கணவனை எதிர்த்து நின்று பேசும்போது, அந்த ஒருமை வாழ்வு சீர்குலைந்து சிதறியதைத்தான் அது காட்டும். அப்படிச் சிதறிய பின்னர் அவளுடன் கூடி வாழ்வது தீராத வேதனையைத்தான் தரும். அந்த வேதனையைவிடப் பேயுடன் கூடி வாழ்வதே நன்றாயிருக்கும் என்கிறார். கொடிய குணமுடைய பேயினை எதிர்நின்று பேசும் மனைவியினும் நல்லது என்பதன் மூலம், மனைவியரின் வாயடக்கத்தினை வற்புறுத்தி உரைக்கின்றார் ஒளவையார்.

'நட்பு' உள்ளக் கலப்பிலேதான் உருவாவது. உள்ளக் கலப்பில்லாமல், சூழ்நிலைகளின் காரணத்தால் வருகிற சில பல ஊதியங்களை மனத்துட்கொண்டு நட்பினர் போலப் பழகுவர் பலர். அத்தகையவரின் நட்பு நட்பு அல்ல; தீமை தருவதும் அதுவாகும். அதனைவிடக் கொடிய பகையே நன்றானது என்றனர். உள்ளங்கலவாத நட்பினால் வருகின்ற துயரம் மிகுதியாகும் என்பதையும் உணர்த்தினார்.

'சாதல்' வாழ்வின் முடிவு. வாழ்வு கைகூடாத போதும், அதிற் சங்கடங்கள் சூழும்போதும், அந்த வாழ்விலே கிடந்து கழிவதினும் சாவே மேலானது என்கின்றனர். இதனால் வாழ வசதி இழந்துவிட்டவர் செத்துவிடல் வேண்டும் என்பது பொருளன்று. அவர்கள் முயன்று அதனைச் சீராக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதே பொருளாகும்.

ஏசி யிடலின் இடாமையே நன்றெதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று - நேசமிலா
வங்கணத்தின் நன்று வலியபகை வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று.

"ஒருவர் வந்து இரந்து நிற்கின்றார். அவரை ஏசிக் கொண்டே ஒருவன் கொடுக்கின்றான். அப்படி அவன் கொடுப்பதினும் கொடாமல் இருப்பதே வந்தவனுக்கு நன்மையாக இருக்கும். கணவனுக்கு எதிரிட்டு நின்று பேசுகிற மனையாளை விடப் பேயே ஒரு கணவனுக்கு நல்லதாக இருக்கும். அன்பற்ற நட்பினைக் காட்டிலும் கொடிய பகையே மேலானது. வாழ்விற்கு வேண்டிய பொருளற்ற வறுமை நிலையினும், சாவதே நன்மை தருவதாக இருக்கும்” என்பது பொருள்.

‘எதிரில் என்பதை எதிர் இல்’ எனப் பிரிக்கலாம். அப்போது எதிர்வீட்டிலே போய்க் கதையளக்கும் அடக்கமற்ற மனைவியர் என்று பொருள் தரும்.