பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

55



இதனால், விருந்தினரை அகமும் முகமும் மலர உபசரித்தல் வேண்டும் என்பதும், முதல் நாளைப் போன்றே அவர் திரும்பிச் செல்லும் நாள்வரையும் உபசரிக்க வேண்டும் என்பதும் உலகோர்க்கு உணர்த்தினார். அந்த உபசரிப்பு, புலவர் வாயாற் புகழ்பெறும் சிறப்பைத் தரும் என்பதற்கு இச் செய்யுளைச் சான்றாகவும் வைத்தார்.

<poem.>காலையி லொன்றாவர் கடும்பகலி லொன்றாவர் மாலையி லொன்றாவர் மனிதரெலாம் - சாலவே முல்லானைப் போல முகமுமக மும்மலர்ந்த நல்லானைக் கண்டறியோம் நாம்.</poem>

“மனிதர்கள் எல்லாரும் காலை நேரத்தில் ஒரு தன்மையாக இருப்பார்கள். கடும்பகலான வேளையில் மற்றொரு வகையாக இருப்பார்கள். மாலை வேளையில் மற்றொன்றாக இருப்பார்கள். அங்ஙனமன்றி, எந் நேரமும் முல்லானைப்போல முகமும் அகமும் மலர்ந்து உபசரிக்கும் நல்லானை யாம் இதுவரை கண்டறியோம்” என்பது பொருள்.

கடும்பகல் - நண்பகல்; வெயிலின் கடுமை குறித்துக் கடும்பகல் என்றனர்.

38. எண் சாண்!

வையாரின் புகழ் தமிழகம் எங்கணுமே பரவி இருந்தது. அவர் வாயினாற் பாடப் பெறவேண்டும் என விரும்பினோர் பலர். அவருடைய வாக்கினைத் தமிழ்த் தெய்வத்தின் வாக்கு எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தோரும் மிகப் பலர்.

ஒளவையாரிடம் ஒரு சிறப்பான தனித்தன்மை இருந்தது. அரசரைப் பாடி, அரசரிடம் பரிசில் பெற்றுப் புலவர்கள் இருந்த காலம் அது. அந்த நாளில், அரசரையும் மக்களையும் அன்பு என்னும் அளவுகோல் ஒன்றினாலேயே அளந்து, அதற்காகவே பாடிப் புகழ்பெற்ற மானுடப் பெருங் கவிஞராகவும் ஒளவையார் திகழ்ந்தனர்.

தாசி சிலம்பியும், குறவனும், பூதனும், முல்லானும் மற்றும் பலரும் ஒளவையாரால் பாராட்டிப் பாடும் நிலை பெற்றனர். இவற்றை நாம் கண்டோம்.

ஆனால், 'ஒளவையார் பெரும் புலவரோ? தெய்விக ஆற்றல் உடையவர் என்பதும் உண்மையோ? எம்போன்று சொற்களைக் கவினுற யாத்தமைப்பவரோ?' என்றெல்லாம் அவரைக் குறித்து ஏளனமாகக் கருதினவர்களும் இல்லாமல் இல்லை.