பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

உயர்ந்த நிலையினரும், குலத்தாலும் குடியாலும் தொழிலாலும் நிலையாலும் தம்முள் வேறுவேறாக இருந்தோரும் பலராவர். எனினும், 'தமிழ்’ என்ற தாயின் திருப்பணியிலே, இவர்கள் எல்லாரும் ஒன்றாகி உயர்ந்து பணி செய்து போற்றியிருக்கின்றனர்; தாம் போற்றுதலைப் பெற்று இருக்கின்றனர்.

முதலிடைகடை என்ற முச் சங்கங்களால் ஆய்ந்து தெளிந்து பேணப்பட்ட செழுந்தமிழ், அந்தச் சங்கங்களின் மறைவுக்குப் பின்னரும், அவ்வப்போது தோன்றிய சான்றோர் பலரால் பேணப்பட்டு வளர்ந்திருக்கிறது. தமிழ் வளர்ச்சியின் இந்தத் தொடர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியச் செல்வங்களிலே ஊடாடி உணர்ந்து இன்புற நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

தமிழ் வளர்த்த புலமைச் செறிவுடன் திகழ்ந்தவர்களுள், ஆண்களைப் போலவே பெண்களும் பலராவர். கடைச்சங்க நூற்களில் ஒளவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தியார், பூதப்பாண்டியன் தேவியார் போன்ற பலரைக் காணுகின்றோம். நாமகளைக் கல்வியின் தெய்வமாக ஏற்றிக்கூறும் பாரத நாட்டிலே, சிலர் 'பெண்களுக்கு ஞானத்தை அறிவுறுத்தல் கூடாது; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்கள் அல்லர்; அவர்கள் பாவப் பிறவிகள்; ஆண்களை ஒட்டி வாழ்ந்து மடிய வேண்டியவர்கள்; ஆண்களின் இன்ப சுகத்துக்காகவே ஏற்பட்டவர்கள்’ என்றெல்லாம் கூறி, அவர்களைப் பெரிதும் புறக்கணித்திருக்கின்றனர். ஆனால், நம் அருமைத் தமிழகத்திலோ, அந்த நிலை என்றுமே இருந்ததில்லை. தாயான தமிழ், தாய்மார்களிடமிருந்து ஒதுங்கவுமில்லை; அவர்களால் ஒதுக்கப்படவுமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மூதாட்டியான ஒளவைப் பிராட்டியாரின் அழகுதமிழ்ச் செய்யுட்கள் விளங்குகின்றன. மக்கள் மனமுவந்து போற்றவும், மன்னர்கள் மனம் விரும்பிப் பேணவுமாக, எளிமையும் அஞ்சாமையும் கொண்டு, இணையற்ற பெரும் புலவராக, மக்கள் தலைவராக ஒளவையார், அந் நாளிலேயே நம் தமிழகத்தில் விளங்கியிருக்கின்றார்.

வள்ளல் பாரியும், மலையமான் திருமுடிக்காரியும், மழவர் கோமான் அதியனும், காஞ்சித் தலைவன் தொண்டைமானும், சோழனும், சேரனும், பாண்டியனும் ஒளவையாரின் சொல்லுக்குக் காட்டி வந்த அளவற்ற பெருமதிப்பினை எண்ணும்பொழுது, பெண்மை அறிவொளியோடு ஒளிக்கதிர் பரப்புங்கால், அந்தப் பேரொளியின் முன்னர், ஆண்மையால் ஆற்றல் மிகுந்தோரும்