பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஔவையார் தனிப்பாடல்கள்



இம் மூவர்களும், இதனால் நின் கருத்திற்கு உகந்தவராக மாட்டார்கள். நான்காமவரான வேளாண் மக்களோ நாணயம் உள்ளவர்கள், நேர்மையாளர்கள். சிறந்த மந்திரிமார்களாக விளங்குவதுட்ன், நின் அரசியல்நெறிக்குச் சிறந்த துணைவர்களாகவும் அமைவார்கள்; அவர்களைக் கொண்டிருக்கும் அரசே சிறந்த அரசும் ஆகும்.”

ஒளவையாரின் அரசியல் நுணுக்கம் சோழனை வியப்படையச் செய்தது. அங்ஙனமே வேளாளர்களை அமர்த்தி அவன் மனவமைதி பெற்றான்.

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு!

"முப்புரி நூல் அணிந்தவன் மந்திரியாக அமைந்தால், அந்த அரசின் செங்கோல் பிறழ்ந்து கொடுங்கோலாக ஆகிவிடும். நின் உறவினரான அரச குலத்தவரை மந்திரியாகக் கொண்டாலோ கொடிய போரினில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். தராசுக்கோல் பிடிப்பவரான வணிகக் குடியினரை மந்திரியாகக் கொண்டால், குடிமக்கள் கேட்டினை அடைவார்கள்.நாலாவதாகிய வேளாள வகுப்பினனோ நினக்கு நல்ல மந்திரியாகவும் இருப்பான் நின்னுடைய அரச நெறிக்கு உற்ற துணையாகவும் விளங்குவான். அவனைத் துணையாகக் கொண்டதே நல்ல அரசாகவும் இருக்கும்” என்பது பொருள்.

நூல் முப்புரி நூல். கோல் - செங்கோல், துலாக்கோல்.

40. நான்கு பிறை!

ரு சமயம் சோழனுடைய புலவரவையிலே கம்பர், ஒளவையார், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர்கள் கூடியிருந்தனர். மற்றும் பலப்பல தமிழறிந்தார்களும் குழுவி இருந்தனர்.

அவ்வமயம், ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் இடையே மனக்கசப்பு நிலவிவந்த காலம். அதனால், கூத்தர் சமயம் கிடைத்தபோதெல்லாம் புகழேந்தியாரைக் குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டார்.

கூத்தர் முதியவர்; சிறந்த புலவர். அரசனுக்கு மிக வேண்டியவர். அந்த அவையின் தலைவராகவும் விளங்கினார்.எனினும், புகழேந்தியாரைக் கண்டால் ஏனோ அவர் உள்ளம் குமுறியது. அவரை மடக்கி விடுவதிலேயே எப்போதும் கவனம் செலுத்தினர்.