பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

63


மனமின்றியே இப்படிக் கூறியதனால், வாதவர்கோன் பின்னை என்றதிலும், வத்தவர்கோன் நாளை என்றதிலும், யாதவர்கோன் இல்லை என்றதே எனக்கு இனிதாக இருந்தது" என்பது பொருள்.

இப்பாடல் பலவகையாக வழங்கும்! பொருளும் பலபடியாக உரைக்கப்படும். அவற்றைப் பிறவற்றான் உணர்க.

43. ஈயார்,தனம்!

ருவனிடம் செல்வம் ஏராளமாகக் குவிந்திருந்தது. அவன் உதவுகின்ற மனமில்லாதவன். அதனால், அந்தப் பணம் பயனற்று, அவன் வீட்டினுள் துருப்பிடித்துக் கிடந்தது.

ஒருநாள், இப்படிப்பட்ட ஈயாத உலோபியாகிய அவனை ஒளவையார் காண நேர்ந்தது. அவனுடைய அளவற்ற செல்வத்தைப் பிறர் சொல்லக் கேட்டறிந்த அவர், அவனுக்கு அறிவுரை சொல்ல விரும்பினார்.

"ஓர் இடத்திலே பெரிதான தேன்கூடு ஒன்று இருக்கிறது. அதனைச் சூழவும் கருங்குளவிகள் எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும். அருகே சென்றவரை வளைத்துத் தாக்கும்.

போகிற இடமோ நெட்டிப்புல் தூறுகள் நிறைந்தது. எளிதில் சென்று சேர்ந்துவிட முடியாதது. ஆரியப் பிசாசும் அங்கே குடி கொண்டிருக்கிறது. செல்பவரைத் தாக்கி வருத்தும் தன்மையது அது. அதன் தாக்குதலுக்கு மீண்டவரோ எவரும் இலர்.

அந்தச் சுடுகாட்டின் ஒருபுறத்தே கரை இடிந்து கொண்டிருக்கும் ஒரு பகுதி, எந்நேரமும் முற்றவும் இடிந்து விழுமோ என்று அச்சம் விளைவிக்கும் இடம்; அந்த இடத்திலே ஒரு பாம்புப் புற்றும் இருக்கிறது; அந்தப் புற்றுக்கு நடுவில் ஒரு பனை மரம் நிற்கிறது; அதன் ஓலை கழிக்கப் பெறாதது; கருக்கு மட்டைகளால் நிறைந்திருக்கும் மரமாகவும் இருப்பது.

அந்தப் பனைமரத்தின் மீதுதான் அந்தத் தேன்கூடு இருக்கிறது. அந்தத் தேன்கூடு எவராலாவது எடுத்துப் பயன்படுத்தக் கூடியதோ? யார்க்கும் பயனற்று அப்படியே இருந்து அழிந்து போவதுதானே அதன் கதி!

அந்தத் தேன்கூடு இருப்பதைப் போலத்தான் இவனிடம் செல்வம் இருப்பதும், அதனைப்பற்றி நாம் ஏன் பேசுதல் வேண்டும்” என்றார் ஒளவையார்.

பயனற்ற செல்வத்தைப் பற்றி இவ்வளவு கடுமையாகச் சுவையோடு வருணித்தவர் வேறு எவருமில்லை. தனத்தைப் பயன்படத்தக்க வழிகளிற் செலவு செய்யாமல் சேர்த்து வைக்கும்