பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



iii

 எளியராகி, அதற்கு அன்பராகிவிடுகின்றனர் என்ற உண்மை புலனாகிறது. இப்படி நாடுபோற்ற வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வியரான ஒளவையார், சங்ககால ஒளவையார் என்று குறிப்பிடப் பெறுபவர் ஆவார்.

சங்ககாலத்திற்குப் பின்னால், தமிழகத்தின் அரசியலிலும் வாழ்வியலிலும் பல நூற்றாண்டுகள் பற்பல மாறுதல்களோடு கழிந்தன. அதன் பின்னர், ஏறக்குறையப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் அளவில், மீண்டும் ஒர் ஒளவையாரைப்பற்றி அறிகின்றோம். கம்பநாடரும், புகழேந்தியாரும், ஒட்டக்கூத்தரும், செயங்கொண்டாரும் மற்றும் புலவர் பெருமக்களும் நிலவிய நாளிலே, அவர்கள் அனைவரும் போற்றும் அறிவுத் திட்பத்துடன் இந்த ஒளவையார் விளங்கினர். இவர் பாடியவையாக நமக்குக் கிடைப்பனவெல்லாம் தனித்தனிச் செய்யுட்களேயாகும். பந்தன் அந்தாதி என்ற ஒரு நூலும், 'அசதிக்கோவை’ என்றொரு கோவையும் இவரால் இயற்றப்பட்டதாகக் கூறுகின்றார்கள். அவற்றுள் கிடைப்பன மிகச்சிலப் பாடல்களே. இந்த ஒளவையார் சிறந்த சிவபக்தராகவும் விநாயகப் பெருமானைப் போற்றி வழிபட்டவராகவும் கூறப்படுகின்றார். இவர் இரண்டாவது ஒளவையார் ஆவார். இந்த இரு ஒளவையார்கள் அல்லாமலும், குழந்தை களுக்கென்று ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நீதிநூல்களையும், விநாயகர் அகவல் என்ற தோத்திர நூலினையும் ஒருவர் செய்துள்ளார். இவரும் 'ஒளவையார் என்ற பெயருடன் தமிழ்ப் பெருமாட்டியாகத் திகழ்ந்தவராவார். உயரிய ஒழுக்கங்களையும், சிறந்த நீதிகளையும், எளிதாகவும் இனிதாகவும் படிப்படியே பயிற்றும் ஒரு நல்ல குழந்தைக் கல்வித் திட்டத்தை, முதன்முதலில் உலகிலேயே வகுத்து உருவாக்கியவர் இவர் என்று கூறலாம். இவர் மூன்றாவது ஒளவையார் ஆவார்.

மற்றும், வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, 'ஒளவைக் குறள் என்னும் பெயரால் ஒரு நூலும் நம் நாட்டில் நிலவுகிறது. இதனை அமைத்தவர் மேலே குறிப்பிட்ட எந்த ஒளவையாரினும் சேர்ந்தவரல்லர் என்பதனை அந்நூலின் அமைப்பே நன்கு காட்டுகின்றது. நம் தமிழகத்தில் அறிவுச் செழுமையுடைய சான்றோர்களை ஒட்டி வழங்கும் தெய்விகப் புனைகதைகள் ஒளவையார் வரலாற்றையும் விட்டுவிடவில்லை. 'ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த குழந்தையாகவும், பிறந்த இடத்திலேயே