பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஔவையார் தனிப்பாடல்கள்



49. மன்று உழுது உண்பான்!

ழுது பயிரிட்டு, அதனால் வரும் விளைவினைக் கொண்டு உயிர் வாழ்வது சிறந்தது. ஆனால், இது மிகவும் உழைப்புச் செலுத்த வேண்டிய ஒரு தொழில் ஆகும். அதனால் உழைக்கச் சோம்பிய சிலர், இதனை மேற்கொள்ளாமல் போகின்றதும் உண்டு. அவர்கள் உழுது பயிரிட்டு அதனால் வருவதை உண்பதற்கு மாறாக, ஊர் மன்றங்களில் சோம்பிக் கிடந்து வீண்பொழுது போக்கி வருவார்கள். நாளடைவில், அவர்களுடைய சோம்பல் அவர்களுடைய வாழ்க்கையைக் குலைத்துவிடும். ஆகவே,பசியின் கொடுமை தலைவிரித்து ஆடத்தொடங்கும். கண்ணிரும் அழுகையும் கால்கொள்ளும்.

உழைப்பதற்குச் சோம்பிய குடும்பத் தலைவன் ஒருவனுடைய செயலால், அக் குடும்பத்தவர் அனைவருமே துயருக்கு உட்பட்டு நலிவர். அவர்கள் அழிவதும் நேரலாம். அவன் குடும்ப வாழ்வு பயனற்றுப் போகும். அது தொடர்ந்து நிலைபெறுதலும் இல்லையாகும்.

இந்த உண்மையைக் கூறிப் பாட்டொன்றைப் பாடினார் ஒளவையார். ஐந்தாவது முடிச்சும் அப்போது அற்று விழுந்தது. புலவர் அவை பெரிதும் ஆரவாரித்தது. தமிழின் ஆற்றலை உணர்ந்தனர் அனைவரும். ஒளவையாரையும் அவர்கள் மனம் விரும்பிப் போற்றினார்கள். அந்த இறுதிப் பாடல் இது.

இதனால், உழுதுண்டு வாழும் உழைப்பின் சிறப்பு கூறப்பெற்றது. உழைக்கச் சோம்பி நேரத்தைப் பாழடிப்பவன், தன் குடும்பத்துடன் முற்றவும் அழிந்து கெடுவான் என்பதும் உரைக்கப் பெற்றது.

பாண்டியனின் மகிழ்விற்கு ஓர் எல்லையில்லை. ஒளவையாரை அகமலர்ந்து உபசரித்து இன்புற்றான் அவன்.

 சென்றுழு துன்பதற்குச் செய்வ தரிதென்று
மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை - முன்றிலில்
துச்சில் இருந்து துடைத்தெழுகண் ணிராலேழ்
எச்சம் இறுமேல் இறு.

“வயலுக்குச் சென்று உழுது விளைவித்து உண்பதனைச் செய்வதற்கு அரிதானதென்று மயங்கி, மன்றிலே சோம்பிக் கிடந்து உண்டு வாழ்பவனின் வாழ்க்கை கெடும். அவன் மனைவி, வீட்டு முற்றத்தின் குடிலிலே இருந்து அழுகின்ற கண்ணிரைத் துடைக்கத் துடைக்க அது பெருகிக்கொண்டே இருக்கும். அவள் அழுகிற கண்ணிரால் அக் குடும்பம் தொடர்பற்று அழியுமேல், நீயும் அறுந்து வீழ்வாயாக" என்பது பொருள்.