பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

75



எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணிரம் பற்றாக் கிடையேபோல் - பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று.

“பெண் வடிவைக் கொண்டவளே! எண்ணாயிரம் ஆண்டுகள் நீரிற்குள் கிடந்தாலும் உள்ளே ஈரம் பற்றுதல் இல்லாதிருப்பது கிடைப்பூண்டு. அதனைப்போல, இவ்வுலகில் பற்றில்லாமல் வாழும் பெண்ணாக ஆவாயாகுக! இவ்வுலகிற் பிறந்தும் பொன்வளை பூணும் கற்பு மனைவியரின் இணைந்த முலைகளின்மேற் கிடந்து, அவரோடு கலந்து மகிழாதவர் சிலர் உள்ளனரே! அவரைப் போய் நீயும் தாக்குக தாக்குக் தாக்குக!” என்பது பொருள்.

ஒளவையாரால் அந்த மண்டபமும் பேய் ஒழிந்த நல்ல மண்டபமாயிற்று. பலருக்குப் பயன்படும் இடமும் ஆயிற்று. அந்தப் பெண்ணின் பேய் வடிவமும் ஒழிந்து, அவளும் மனத்தெளிவு பெற்றாள் என்பது கதை.

54. உறங்காது கண்!

ருசமயம், ஒளவையார் காட்டு வழியிலே போய்க் கொண்டிருந்தார். அவ்வேளை முருகப்பெருமான் அவரைச் சோதிக்க நினைத்தான். மாடு மேய்க்கும் சிறுவனைப்போல வடிவெடுத்தான். வழியிலிருந்த நாவல் மரத்தின் மீதமர்ந்து, அதன் பழங்களைச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தான்.

ஒளவையாரும், அம் மரத்தின் அடிப்புறமாக நிழலுக்காக வந்தார். 'பாட்டி' என்று அழைத்த இனிமையான மழலைக் குரலைக் கேட்டு மேலே நிமிர்ந்தார்.

முருகச் சிறுவன் மரத்தின்மேல் தோன்றினான். அவனைச் சாதாரணச் சிறுவனாகவே கருதிவிட்டார் ஒளவையார்.

“பாட்டி பாட்டி பழம் வேண்டுமா உனக்கு?” என்றான் அவன். அவன் குரலில் அன்பு நெகிழ்ந்தது.

“கொஞ்சம் போடு அப்பா” என்றார் ஒளவையார்.

“சுட்ட பழமா? சுடாத பழமா? உனக்கு எவை வேண்டும்?" என்று கேட்டான் சிறுவன்.

“சுடுகிற பழமா? சுடாத பழமா? பழமும் சுடுமா? சரி! சரி எனக்குச் சுடுகிற பழந்தான் கொஞ்சம் போடேன்” என்றார் ஒளவையார் சிரித்தபடி