பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
IV

 பெற்றோரால் கைவிடப்பட்ட மகவாகவும், பாணர் குடியிலே வளர்ந்து பைந்தமிழ் பரப்பிய பெருமாட்டியாகவும் ஒரு கதை நிலவுகிறது.

பாரி மகளிரைத் திருக்கோவலூர் மலையமான் மக்கட்கு மணமுடிக்கக் கருதி சேர,சோழ, பாண்டியரை வரவழைத்து அரிய பல அற்புதச் செயல்களையெல்லாம் செய்தவராகவும், வெட்டப்பட்ட பலாமரம் தழைத்துப் பூத்துக் காய்த்து மீண்டும் நிலைபெறச் செய்தவராகவும், பேயினை வெருட்டியவராகவும், மற்றும் பலவாறாகவும் பலகதைகள் ஒளவையாரின் பெயராலே நிலவுகின்றன. சில தனிப்பாடல்கள் இக் கதைகளின் எதிரொலி யாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையிலே, ஒளவையாரின் தனிப்பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் தனிநூலாக வெளியிட வேண்டும் என்ற முயற்சியிலே ஈடுபட நேர்ந்தபோது, ஒளவையாரின் பெயரால் விளங்கும் தனிப்பாடல்கள் பலவற்றையும் தொகுத்தபோது, அவற்றால் அறியக்கூடிய செய்திக் குறிப்புக்கள் எந்த ஒளவையாரைக் குறிப்பன என்று எளிதிலே வரையறுக்க முடியாதவைகளாகவே விளங்கின. ஒளவையாரின் வரலாற்றை ஒரு நெறியாக உணர முடியாமல், அங்கங்கே புலப்படும் சிற்சில செய்திகளுடன் மட்டுமே மனநிறைவு அடைய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

ஆகவே, அந்தந்தப் பாடலுக்கு உரியதாக வழங்கப்பட்டுவரும் குறிப்புக்களை, அங்கங்கு அப்படியப்படியே தந்து செல்வதுடன், என் பணியை ஒருவாறு நிறைவேற்றி இருக்கிறேன்.

புலவராக மட்டுமன்றி, மக்களால் போற்றிப் பரவும் தெய்வங்களுள் ஒருவராகவும் ஒளவையார் விளங்குவதை, தென்பாண்டி நாட்டிலே விளங்கும் ஒளவையார் கோயில்’ களாலும், தென்பாண்டித் திருநாட்டு இல்லுறை தெய்வங்கள், 'ஒளவையார் நோன்பு எனத் தமக்கே (பெண்களுக்கே) உரித்தாகக் கொண்டாடும் நோன்பினாலும் நாம் அறியலாம்.

'ஒளவையார்’ என்ற பெயராற் பலகாலத்தும் பலர் நிலவியிருந்தனரோ, அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாரும் ஒளவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப் பட்டனரோ நாம் அறியோம். ஒளவை என்ற சொல் மூதாட்டி யென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ, அல்லது அறிவின் முதிர்ச்சியைக் குறித்ததோ நாம் அறியோம்.