பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஔவையார் தனிப்பாடல்கள்



பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரியது பெரியது புவனம் பெரியது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

“வெம்மை பரவிய வேலோனே! உலகமோ மிகவும் பெரியது. அது நான்முகனால் படைக்கப்பெற்றது. நான்முகனோ திருமாலின் உந்தியிற் பிறந்தவன். திருமாலோ பாற்கடலில் பள்ளி கொள்பவன். பாற்கடல் குறுமுனியின் உள்ளங்கையில் அடங்கியது. குறுமுனியோ கலசத்தில் பிறந்தவன். கலசமோ புவியிலுள்ள சிறிதளவு மண்ணினால் உருவானது. புவியோ ஆயிரம் தலைகளுடைய ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமையாக மட்டுமே இருப்பது. அவனோ உமையவள் சிறுவிரலின் மோதிரமாக விளங்குபவன். உமையோ இறைவரின் ஒரு பாகத்தே ஒடுங்கியிருப்பவள். இறைவரோ தொண்டர்களின் உள்ளத்தே அடங்கியிருப்பவர். அதனால், தொண்டர்களின் பெருமைதான் சொல்லிலடங்காத அளவுக்குப் பெருமை உடையதாகும்” என்பது பொருள்.

58. அரியது எது?

சிலவற்றை அரியதென்று கருதுகின்றோம். அரிய அவற்றை முயன்று அடைவதனைப் பெரிதான பேறாகவும் கருதுகின்றோம். அந்த முயற்சியிலே தளராதும் தயங்காதும் ஈடுபடுகின்றோம். இவ்வாறு அரியதெனக் கருதும் பொருள்களும், குணங்களும் அவற்றைக் கொள்பவரின் கருத்துக்களுக்கு ஏற்ப மாறுபடுவதும், வேறுபடுவதும் உண்டு.

முருகப் பிரானாகிய வேலன், அடுத்தபடியாக ஒளவையாரை வினவியது, 'அரியது எது?’ என்பதாகும். அதற்கு விடை கூறுகிறவர், சிறந்த சில உண்மைகளையும் விளக்குகின்றார்.

ஒன்று முதலாகிய அறிவுடன் விளங்கி வருகிற கோடானு கோடி உயிர் வகைகளுள், மானுடராகப் பிறவி எடுத்திருக்கும் அந்தப் பாக்கியம் ஒன்றே, நாம் அரியதாகக் கொள்ள வேண்டியது.