பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

83



ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்க்க வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீராக்க லாமோ?

"ஆலமரத்தை பலா மரமாக ஆக்குவதற்கு இயலுமோ? நாயின் வாலை நிமிர்த்து விடுவதற்கு முடியுமோ? கருநிறக் காக்கையைப் பேசுவிக்கக் கூடுமோ? கருணையில்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயன்றால், அதுவும் இயல்வதாகுமோ? இயலவே இயலாது” என்பது இதன் பொருள்.

60. சோமன் பெருமை!

ந்த நாளிலே, சோமன் என்னும் பெயருடன் ஒரு வள்ளல் இருந்தான். அவன் கருணை உள்ளம் உடையவன். இரவலர்க்கு வழங்கி வழங்கி ஏற்றம் பெற்றுத் திகழ்ந்தவன்.

இரவலரின் வறுமையைப் போக்குவதற்கு உரிய மனப்பண்பு இல்லாத, செல்வச் செழுமையுடைய கொடியவர்கள் அன்றும் சிலர் இருந்தனர்.அவர்களுடைய செல்வ வளத்தினைக் கண்டும், போலிப் புகழைக் கேட்டும், அவர்களை நாடிச்சென்று பலர் ஏமாந்து மனவேதனையுற்று வருந்தினர். அவர்களுடைய இழிசெயலால் சோமனின் கொடைப் பெருமை மேலும் உயர்வு உடையதாயிற்று.

நிழல் அருமை உடையது. அந்த அருமையினை அறிய வேண்டுமானால், சற்றுக் கொடிய வெய்யிலிலே போய் நின்றால் தான், நன்கு உணர முடியும்.

கடுமையான தீவினையினாலே ஒருவன் வாட்டமுற்று நலிகின்ற பொழுதுதான், அவனுக்கு ஈசனின் திருவடி நிழலிலே நினைவு செல்லும் அவன்தான் ஈசன் கழல்களைச் சேருவதனால் உண்டாகும் பேரின்பப் பயன்களைப் பற்றி நன்கு அறிய முடியும்.

பழகு தமிழ்ச் சொற்கள், அருமையாக அமைந்துள்ளதனைக் காண விரும்பினால், நாலடியாரும் திருக்குறளுமே அதற்கு உதவுவன.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது பொருந்தும். ஒன்றுக்கொன்று எதிரான தன்மை. இவை போலவே, சோமனின் கொடை அருமையானது என்று சொன்னால் மட்டும் போதாது. அதனைச் சரியாக அறிந்து உணர வேண்டுமானால், கீழ்மக்களிடத்தே சென்று பழகினால்தான், அதனைச் செவ்விதாக அறிய முடியும்.