பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஔவையார் தனிப்பாடல்கள்



வெயிலுக்கு நிழல் போலவும், வெவ்வினைக்கு ஈசன் திருவடி நிழல்போலவும், சொல்லருமைக்கு நாலிரண்டு போலவும், கொடைக்குச் சிறந்தோனாக விளங்கியவன் சோமன் என்கிறது செய்யுள்.

பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்றால் நாலும் இரண்டும் சொல்லருமைக்கு எதிரானதா? இல்லையே! இங்கே நேராகவே உரைப்பதாகக் கொள்ள வேண்டும்.

நிழல்அருமை வெய்யலில் நின்றறிமின் ஈசன்
கழல்அருமை வெவ்வினையின் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன்
கொடையருமை புல்லரிடத் தேயறிமின் போய்

“நிழலின் அருமையினை வெய்யலிலே நின்றபோது எண்ணிக் காணுங்கள். கொடிய தீவினையிற் சிக்கி உழலுங் காலத்தே, இறைவனின் திருவடிகள் தரும் அரிய பயனைக் காணுங்கள். பயின்று வரும் தமிழ்ச் சொல்லின் அருமையினை நாலடியினும் திருக்குறளினும் காணுங்கள். சோமனின் கொடை அருமையைக் கீழோரான செல்வரிடத்தே போவதனாலே அறிந்து கொள்ளுங்கள்” என்பது பொருள்.

61. வெண்பா அரிது!

விஞர்கள், சொற்களை நயமுற யாத்துப் பலவகையான செய்யுள்களைச் செய்து தமிழன்னையைச் சிறப்பிக்கின்றனர். என்றாலும், வெண்பா இயற்றுதல் இவற்றுள் மிகவும் கடினமான ஒரு முயற்சியாகும்.

அந் நாளில் புகழேந்தியார் வெண்பாப் பாடுவதில் சிறப்புடன் விளங்கினார். அவர், கூத்தரால் பற்பல கொடுமைகளுக்கும் ஆளானவர். அவருடைய புலமைச் சிறப்பைப் போற்றும் வகையினால், இச் செய்யுளை ஒளவையார் இயற்றியதாகவும் கருதலாம்.

'பிள்ளைத்தமிழ்’ என்ற பாவகை மிகவும் சுவையானது. அதிற்பாட வேண்டிய பருவங்களுள், 'அம்புலிப் பருவத்தைப் பாடுதல்' என்பது அரிதான கவிச் செயலாகும்.

'உலா' என்னும் பிரபந்த வகையினைச் செய்யும்போது, பெதும்பைப் பருவத்தினைப் பாடுதல் மிகவும் முயற்சி உடையதாக விளங்கும். அது நன்றாக அமைவதைப் பொறுத்தே அந்த உலாவும் மதிக்கப்பெறும்.