பக்கம்:கங்கா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 யிருக்கிறது. ஒரு சமயம் கனவில், பாழும் சுவரில் ஒரு கரிக் கட்டி தானாகவே ஒரு வாக்கியத் தொடரை எழுதி அடியெடுத்துக் கொடுத்தது. சம்பந்தா சம்பந்தமற்றவை போன்று வார்த்தைகள் மூளையுள் வேளையில்லா வேளை களில் மீன் குட்டிகள் போல், பல வர்ணங்களில் நீந்திக் காண்பிக்கும். சில் சமயங்களில் நான் தேடிய சொல், அதே சொல், நான் தேடிய அதே உருவில், காத்திருந்தாற் போல், நடுத் தெருவில் நான் போய்க் கொண்டிருக்கையில் யார் வாயிலிருந்தேனும் உதிரும். "நீ ஒன்றும் கழற்றிவிடவில்லை. என் கட்டியக்காரன். தான் சொன்னதை நீ சொல்" என்று அது எனக்கு உணர்த்துகிறது. இன்னமும் என் கதைகளின் சில முதல் நகல்களைப் பத்திரமாய் வைத்திருக்கிறேன்; நவராத்திரிக்கு சுண்டல் கட்ட; எனக்கு ஆபீஸுக்கு டிபன் மடிக்க, அரைத்துக் காகிதக் கூடை செய்ய, வென்னிரடுப்பு எரிக்க என் மனைவி அவைகளின் மேல் கண்ணாயிருக்கிறாள். நிறுத்துப் போட்டால் பொய்த் தராசிலும் பணமாகும். ஆனால் எனக்கு அவைகளை விட்டுப் பிரிய மனமில்லை. அடிபட்ட மிருகம் மறைவிடமாய், சாகவோ தேறவோ படுத்துத் தன் காயங்களை நக்கிக் கொள்வது போல், தேடிச் சலித்து மனம் சோர்ந்த சமயங்களில், என் முதல் நகல்களைப் புரட்டிப் பார்ப்பது உண்டு. ஒவ்வொன்றும் ஒரு ரணகளம், இக் குப்பைகள் என் இதயத்தில் வெடித்த பாளங்கள். அத்தனையும் என் ரத்தம், நான் சொல்லைத் தேடும் சான்று. இவைகளில் என் மூலமாய் வெளிப் பட்டிருக்கும் சொற்கள், பொருள்கள், செயல்கள் எல்லாம், அப்பக்கங்களுள் கடைசியாகப் பேனா முனையில் கிடைத்த கதையில் சேராவிட்டாலும், ஒன்று கூட வீனில்லை; அவை, அவைகளின் தனித்தனிக் கதையில், தம் தம் இடங்களில் பதியத் தம் தம் வேளை களுக்குக் காத்திருக்கின்றன. இது என் அனுபவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/10&oldid=764271" இலிருந்து மீள்விக்கப்பட்டது