பக்கம்:கங்கா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கங்கா


எதை மறவாதே என்று விதித்தீர்கள் ? பின்னராயினும், என் கனவிலோ, தாங்கள் விட்டுச் சென்ற தங்கள் சொற்ப உடைமைகளிலோ இதுவரை விளக்கம் கிட்டவில்லை. ஒரு தடவை நாம் ஆற்று மணலில் உட்கார்ந் திருந்தோம். இருந்தாற்போல் இருந்து தாங்கள், "மணலைக் குவித்து அதில் குச்சியை ஒளித்துக் கண்டு பிடிக்கலாம்” என்றீர்கள். எனக்கு வெட்கமாயிருந்தது. "நாம் என்ன குழந்தைகளா ?” என்றேன். "பின் நாம் என்ன பெரியவர்களா ? பெரியவர்கள், குழந்தைகளை அளக்கும் உன் கோல் எது ? குழந்தையா யிருக்க வலிக்கிறதா ? இருக்கத்தான் முடியுமா ? வெளி யில் சொன்னால் வெட்கக்கேடு, நாம் பெரியவர்களும் இல்லை. பெரிய பதவியைத் தேடி வந்திருக்கிறாய், வெட்கப்பட்டால் முடியுமா ? வா, வா..." விளையாடினோம். சுவாரஸ்யமாய்த்தானிருந்தது, நம்மிடையில், நாம் குவித்த அவ்வளவு சிறிய மணல் கரையுள், எப்படி அவ்வளவு தினுசுகளில் தங்களால் ஒளிக்க முடிந்தது ? என் வியப்பை தங்களிடம் நான் வெளி விட்டபோது, தாங்கள் குச்சியை ஒளித்த இடத்தின் மேல் கையை அறைந்து ஊன்றிக்கொண்டு, "ஆத்மநாதா, நான் இப்படி ஆகுமுன், ஒரு ஜேப்படி” என்றீர்கள். எனக்குக் கண்ட அதிர்ச்சியில் என்னையறியாமலே என் கைகள் சடக்கென்று இழுத்துக் கொண்டன. ஆனால் அதைக் கண்டு கொள்ளாததுபோல், மேலும்: "இதுவரை நான் கையும் பிடியுமாய் அகப்பட்டுக் கொண்டதில்லை, ஒளிக்கவும், ஒளிக்கும் இடங்களும் எனக்கு அற்றுபடி. சரி குச்சியைத் தேடுவோம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/48&oldid=1283276" இலிருந்து மீள்விக்கப்பட்டது