பக்கம்:கங்கா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

37


கருவானில் ஒரு நட்சத்திரம்,- ஒரே நட்சத்திரம் ! தனித்து நிலைகலைந்து ஊசலாடுகிறது. அதன் தவிப்பு பீதியை விளைவிக்கிறது. யாருடைய நட்சத்திரம் ? "-அப்போது என் பிழைப்பே அதுதான். இதற்குக் கூட்டில் வேலை செய்தால்தான் ஆபத்துக் குறைவு. ஆனால் நான் தனியாய்த்தான் வேலை செய்தேன். நான் எப்பவுமே தனி, நிறையோ குறையோ, எனக்குப் பங்கு இஷ்டமில்லை. அகப்பட்டுக் கொள்ளாதவரையில், அகப் பட்டதெல்லாம் என்னுடையது. அகப்பட்டுக் கொண் டால் ?- அதுவும் என்னுடையதுதான். நம்பினவன் காட்டிக் கொடுத்து விட்டான் என்கிற சந்தேகத்துக்கு வழியில்லை அல்லவா ? காரியம் எப்படியோ, அதைத் தனியாய்ப் புரிவதில் இந்த நிறைவு, தூய்மை காணலாம். எது விளைந்தாலும் என்னுடையது, யாருக்கும் பங்கு இல்லை. ஆனால், அதிர்ஷ்டம் ஒன்றேபோல் இருக்குமா ? ஒரு சமயம் பத்து ரூபாய் நோட்டு கிடைக்கும். ஒரு சமயம் வெறும் வண்ணான் சீட்டை, பணத்தைவிடப் பத்திரமாய் பையில் ஒளித்து வைத்திருக்கும். கடைசி சமயம்-(எதற்கும் ஒரு கடைசி உண்டே :) ஒரு பர்ஸ் அடித்தேன். என் ஆளின் மேல் வைத்த ஆரம்ப இலக்கை நழுவவிடாது, பின் தொடர்ந்து கொண்டே வந்து, தகுந்த சமயத்தில் கூட்டத்தில் பின்னா லிருந்து தள்ளி, அவன் மேல் விழுந்தடித்து ஓடுகையி லேயே அவன் ஜேபியுள் இரண்டு விரலைவிட்டு, தகடால் கிழித்து பர்ஸை வெளிப்படுத்தி, பறித்துக்கொண்டு, மடக்கி மடக்கி இந்தச் சந்தில் புகுந்து, அந்தச் சந்தில் திரும்பி, சிட்டாய்ப் பறந்தேன். அனுபவத்திற்குத்தான் அந்த வேகம் புரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/51&oldid=1283279" இலிருந்து மீள்விக்கப்பட்டது