பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


படை நல்ல உள்ளமேயாகும். இக்கருத்தைக்கொண்டே தான் கவிஞர் பாரதியார்,

‘உள்ளத்தில் உண்மைாளி உண்டாயின்
        வாக்கினிலே ஒளி உண் டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
        கவிப்பெருக்கும் மேவும்’

என்று பாடினார். எனவே, கலை வளரவேண்டுமானால், அதன் வழி உயிர் வாழ்வும் சிறக்க வேண்டுமானால், அதற்கு உள்ளம் இன்றியமையாததாக அமைதல் வேண்டும். அந்த நல்ல உள்ளத்தின் வழிதான் உலகில் இன்று வாழும் எண்ணற்ற கலைகள் தோன்றின. காவியக் கலையாயினும், ஓவியக் கலையாயினும், வேறு எக்கலையாயினும் அனைத்துக்கும் பிறப்பிடம் அந்த நல்ல உள்ளமேயாகும். பல்வேறு இயற்கையின் வண்ணக்கோலங்களைக் காணும் பல கண்கள் வாளா உறங்க, அந்த நல்லுள்ளம் பெற்றவர்தம் கண்கள் அவற்றைக் காணும்போது, அக்காட்சி கவிதையாக உருப்பெறுகிறது. கல்லிலும் வண்ணத்திலும் கலை வடித்துத் தீட்டப்பெறும். கிழியிலும் தாளிலும் வண்ண ஓவியங்களாகக் காட்சியளிக்கப் பயன் பெறும். எனவே, கலை தோன்றுவதற்கு உள்ளத்தான் இடமாக அமைகின்றது.

கலை தோன்றுவதற்கு மட்டுமின்றி, கண்டு அனுபவிப்பதற்குங்கூட அந்த உள்ளந்தான் தேவைப்படுகிறது. ஓடுகின்ற நண்டைக் கண்டும், உழுகின்ற நாங்கூழ்ப் புழுவைக் கண்டும் உள்ளம் களி துளும்பிப் பாடுகின்ற புலவன், தமிழ் மொழியில் மட்டுமின்றி, உலக மொழிகள் அனைத்திலுமே காணப்பெறுகின்றான். அத்துடன் ஒரு சிலர் அந்த இயற்கை நலக்கலைகளையும்,