பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


என்று தம் நாட்டு இயல் கெடாவகையில் காவியம் அமைத்தார். வில் முறிவால் கூடும் மணத்தினும் உளம் ஒன்றிய மணமே மேல் என்ற தமிழ் நாட்டு மண முறைப்படி, கோசலக் குமரனையும் மிதிலைச் செல்வியையும் மணமாகு முன்பே காண வைத்துக் காதலைப் பெருக்கி விட்டார். இவ்வாறு எத்தனையோ வகையில் வடநாட்டுக் கதையில் தம் நாட்டுப் பண்பினைப் புகுத்தி அவ்விலக்கியத்தைச் சாகாத பேரிலக்கியமாக வாழ வைத்துவிட்டார் கம்பர். அவர் அப்படிச் சாகா வரம் தந்த காவியத்தில் என்ன தான் சொல்லியிருக்கிறார் என்பதை அறியுமுன் அவர் காவியத்தைப் பற்றி நாட்டில் வழங்கும் மாறுபட்ட கருத்துக்களை நோக்கி மேலே செல்வோம்.

கம்பராமாயணம் தமிழ் நாட்டுக்கு வேண்டாத ஒன்று என்பார், அதில் தமிழ் மக்கள் இழித்துரைக்கப்படுகின்றார்கள் என்ற காரணம் காட்டுவர்; அக்கதை ஆரியன் திராவிடனை வென்ற கதை என்று கூறுவர்; அது சாதாரண மனிதனாகிய இராமனைக் கடவுளாகக் காட்டும் வெறுங்கற்பனைக் கதை என்பர்; தமிழ் நாட்டுப் பண்பு அதில் சிறிதும் இல்லை என்பர். இவர்கள் கூறும் அனைத்தும் உண்மையாவனவா என்று ஆராயின், கம்பர் பச்சைத் தமிழர்—இன்று தமிழ் மரபில் வந்தவர்கள் என்று மார்தட்டும் வீரர்களுக்கெல்லாம் மேம்பட்ட தமிழர்—என்பது நன்கு புலனாகும். அவர் செய்த தவறெல்லாம் வடமொழிக் காதையை மொழிபெயர்த்ததுதான் என்பர். அப்படியாயின், இன்று உலகமே மொழி பெயர்ப்பு என்ற வெள்ளத்தில் மிதந்து, கொள்ளை கொள்ளையாக இலக்கியங்களை அள்ளிவீசுகின்றதே! அது தவறா? மொழிபெயர்ப்பாகிய கம்பராமாயணம் வேண்டாமென்று கூறும் அதே எழுத்தாளர்கள், தாம் பல நாட்டு மொழிகளிலிருந்து பலப்பல இலக்கியங்களை மொழி பெயர்க்கின்றனரே! அது ஏன்? கம்பர் காலத்தில் வட மொழிக்கு நாட்டில் இருந்த ஆதிக்கத்தின் வழி அவர் அப் படியே மொழிபெயர்க்காது, தம் நாட்டுப் பண்பாட்டுக்குப்