பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


வேண்டுமென்றே திராவிடனாக்கி, இல்லாத ஆரிய திராவிடப் போராட்டத்தை அதனுள் புகுத்தி, அதனால் இராமாயணம் நமக்குத் தேவை இல்லையென்று கூறுவது எப்படிப் பொருந்தும்? இராமாயணம் ஏறக்குறைய ஒரு குடும்பச் சண்டை போன்றதேயாகும். இருவரும் ஆரியக் குடும்பத்தினர் — அவர்களுக்குள் பூசல் — அவ்வளவுதான். ஆனால், தமிழன் தோற்றவனையெல்லாம் தன்னவன் என்று கூறிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையில் செல்லத் தொடங்கின தன் விளைவுதான் இந்நூலை ஆரிய திராவிடப் போராட்டம் என்பது. தோற்ற இரணியன், தோற்ற சூரபதுமன், தோற்ற இராவணன் ஆகியோர் திராவிடர் என்றால், திராவிடர் என்றும் வென்றதில்லையா? ஆகவே, தமது கற்பனை மூலம் உண்மையில் அவர்கள் தமிழ் நாட்டுக்குக் கேடு சூழ்கின்றவர்களே அன்றி, நலம் செய்பவர்களாகமாட்டார்கள்.

இராமாயணத்தில் அதற்கு நேர் மாறாகத் தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் பேசப்படுகின்றன. சீதையைத் தேட அனுமனைச் சுக்கிரீவன் அனுப்பிய காலத்து, ‘சீதையைச் சேர சோழ பாண்டியர் ஆளும் தமிழ் நாட்டிலும் தேடி காணுங்கள்,’ என்று கூறுகின்றான். வடமொழி ஆதிகாவியத்தில் தமிழின் பெருமை இன்னும் ஒரு படி மேலாகப் பேசப்படுகின்றது என்பர். வான்மீகி யார் சுக்கிரீவன் வாயிலாக அனுமனுக்கு ஆணையிடும் போது, அவ்வனுமன் தமிழ் நாட்டில் சுற்றி வருங்கால் அமைதியாகச் செல்லவேண்டுமென்றும், அதுவும் தமிழ் முனிவனாகிய அகத்திய முனிவன் வாழும் பொதிகை மலைப் பக்கம் சென்றால் மிக்க பணிவோடு செல்லவேண்டுமென்றும் அறிவுறுத்தியதாக அறிஞர் கூறுவர். அப்படி வான்மீகியார் கூறியிருப்பது உண்மையாயின், அவர்கள் தமிழையும் தமிழ் நாட்டையும் எத்துணைச் சிறப்பாகப் போற்றியிருக்கின்றனர் என்பது புலனாகும். உண்மை இவ்வாறு இருக்க, இல்லாத ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு, இன்று தமிழ் நாட்டில் சிலர் இராமாயணத்தை வேண்டா-