பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்

 பெற்றது தமிழ் மண்ணேயாகும். அதில் தோன்றிய புலவர்கள் அன்று தொட்டு இன்றுவரை அப்பொருளாதாரச் சமரசத்தை வற்புறுத்தியே செல்லுகின்றனர். கம்பர் அவ்வுண்மையைக் கோசல நாட்டின் மேலும், அயோத்தி நகரின் மேலும் வைத்துத் தாம் காணவேண்டிய தமிழ் நாட்டைப் பற்றிக் கனவுலகில் சஞ்சரிக்கின்றார்.

'எல்லாரும் எல்லாப் பெருஞ்செல் வமும்எய்த லாலே
இல்லாரும் இல்லை உடையார் களும்இல்லை மாதோ.'

(நகரப். 74) என்று கம்பர் பாடிய அடிப்படைதானே, 'சோஷியலிச' சமுதாயத்தின் அடிப்படைத் திட்டம். ஆம்? நாட்டில் பிறந்த அத்தனை பேருக்கும் நாட்டில் உள்ள அத்துணைச் செல்வங்களும் உரிமையுடையனவாம். அவற்றைப் பெற்று அனுபவிக்காதவர்கள் நாட்டில் இல்லை. எனவே, அந்நாட்டில் தாழ்ந்தோர் உயர்ந்தோர், செல்வர் வறியர் என்ற வேறுபாடு இல்லை. அதுவே இன்றைய மனித சமுதாயம் வேண்டுவதாகும். இனி, மக்கள் தமக்கெனப் பற்றற்று வாழ வேண்டுமெனவும், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக இருப்பார் மேம்பட்டவர் என்றும் கம்பர் காட்டுகின்றர். அந்தப் பசையற்ற உள்ளத்தைக் காட்டும் போது கம்பர் கவி பாடும் நலன் நன்கு விளங்குகின்றது. பசையற்ற நிலை இழிந்தார் இடத்தும் ஒரோ வழி உண்டாகும். அந்த இடம் பொருளாசையால் உடலை விற்பார் உள்ளமாகும். ஒரு வகையில் துறவியர் பற்றற்ற இடத்து உயர்ந்து தமக்கென வாழா வகையில் சிறக்க, மற்றொரு வகையில் பொருள் பற்றுக்கொண்டு மற்றைய அற்று வாழும் உலகத்தையும் காட்ட விரும்பிய கம்பர், இரண்டையும் இணைத்து வழியிடைச் சுரத்தியல் கூறும் முறையில் அமைத்துள்ளார். இவ்விரண்டையும் ஒத்துநோக்கி நல்லதனைக் கொண்டு அல்லதனை அகற்ற வேண்டுவது அறிஞர் கடன் அன்றோ? அவர் பாட்டினைக் கண்டு மேலே செல்லலாம்: