பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


நாட்டில் ஒரு சாதாரணப் பழமொழி வழக்கில் உள்ளது. ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதே அது. இப்பழமொழி மிக எளிய ஒன்றாயினும், இதில் கலை உள்ளத்தைப் புகுத்திவிட்டான் இதை எழுதிய புலவன். கல் உளி கொண்டு கற்றச்சன் ஒரு பெருங்கல்லில் நாயைச் செதுக்குகின்றான். அத்தகைய கல்லும் நாயும் இரு வேறு வகைக் காட்சிகள் தாம். ஆம், கலை உள்ளத்தோடு அதைக் காண்பவனுக்கு அந்நாய், உயிருடன் ஓடியாடும் நாயினைட் போன்றே தோன்றுகின்றது. ஆனால், கலையுள மற்றவனுக்கோ, அது வேறுங் கல்லே. அதனாலேதான் கல்லாகக் காணும் கண் அதில் நாயைக் காண முடியாது என்றும், அதே நிலையில் அதை நாயாகவே எண்ணி நோக்குபவன் அதைக் கல் என்று கொள்ள மறுக்கின்றான் என்றும் விளக்கம் தரும் இப் பழமொழி எழுந்தது.

பொருட்காட்சிகளில் இது போன்ற சிலைகள் பல செதுக்கி வைக்கப் பெற்றிருக்கும். பழங்காலங்களில் பாறைகளிலேயும் இத்தகைய சிலைகளைச் செதுக்கியுள்ளார்கள். காட்சிச் சாலையில் இருக்கும் கற்பொருள்களைக் காட்டும் போது யாரும் ‘இது நாய்க் கல், இது குதிரைக் கல், இது யானைக் கல்,’ என்று காட்டுவது உண்டோ? இல்லையே! ‘இதோ நாய்; இதோ குதிரை; அதோ யானை,’ என்றுதானே காட்டுகின்றனர்? இதை நோக்கும்போது அவர் கண்களுக்குக் கலை உருவம் தெரிகின்றதேயன்றிக் கல் உருவம் தோன்றுவதில்லையே! இந்த நிலை எப்படி அமைந்தது.

ஒருமை உணர்வு கலைக்கு இன்றியமையாத தென்பதைச் சுந்தரர் எவ்வாறு காட்டியுள்ளார் என்பதைக் காண்போம்: சுந்தரர் பல நாயன்மார்களைப் பற்றி பாடியுள்ளார்.