பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


யவளாகக் கூறுவோம். அவள் மைந்தன் வாக்கிலேயே குகனுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘படரெலாம் படைத்தாளை, பழிவளர்க்கும் செவிலியை’ என்று காட்டும் நிலையில் கம்பர் அவள் கொடுமையைக் கதைப்போக்கிற்கு ஏற்பக் காட்ட நினைத்தார். எனினும் அவள் உண்மையில் மாசற்ற ஒருத்தி என்பதை முன்னரே நன்கு காட்டி விட்டாரே! தன் கணவன் தவறினான் என்ற பழிச்சொல்லை ஏற்கக் கூடாது என்ற காரணத்தால் எல்லாப் பழியையும் தன் மேல் ஏற்றாள் என்பது ஒருபுற இருக்க, அவள் உள்ளத் தூய்மையை இராமன் முடிசூடப் போகின்றான் என்று கூனி கூறியதும் வெளிப்படுத்திய சொற்கள் மூலம் விளக்குகின்றார். ‘பின் அத்தகைய நல்லவள் மனம் ஏன் மாறிற்று?’ என்ற கேள்விக்குக் கம்பரே பதில் அளித்து மேலும் அவள் தூய்மைக்கு அரண் அமைக்கின்றார். திரியாத கைகேயிதன் மனம் திரியாவிடில் அரக்கர் கொடுமை அழிவதெங்கே? அமரர் வாழ்வு சிறப்பதெங்கே? அவற்றிற்கெல்லாம் மேலாக, இன்று நாம் பெற்றிருக்கும் இந்த இராமாயணப் பேரிலக்கியம் எங்கே? இவ்வுண்மைகளைக் கம்பர்,

“தீய மந்தரை இவ்வழிச் செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயை யும் அவர் பெற்றநல வரம்உண்மை யானும்
ஆய அந்தணன் இயற்றிய அருந்தவத் தாலும்,

‘அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மையன் றோஇன்றிவ் வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின் றதுவே?’
(மந்தரை சூழ். 77, 78)

என்று காட்டுகின்றார். இப்பாடல்களை நோக்கும்போது யாராவது கைகேயியைக் கொடியவள் என்று கூற முடியுமா? இன்னும் இப்படலம் முழுதும் அவள் ஏற்றந்தான் பேசப்படுகிறது. ‘அரசினை உன் மகனுக் காக்கி, இராமனைக்