பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


பிரமன் முதல் ஒருவரும் இலர்; ஆகவே, இராவணன் தவறிழைத்தமை—பாவம்!—விதி வலியினாலேதான் என நைகின்றாள் சீதை.

‘பூவிலோன் ஆதி யாகப் புலன்கள்போ நெறியில் போகாத்

தேவரோ அவுணர் தாமோ யாவரே வினையின் தீர்ந்தார்?’
(நிந்தனை 59)

என்றும்,

‘கடிக்கும்வல் லாவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை அடுக்கும்ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை

மூடிக்குநர் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ?’
(நிந்தனை. 60)

என்றும் சீற்றமுற்ற சீதை வாயிலாகவே காட்டுகின்றார் கம்பர். அப்படி யார் அவனை முடிக்க நினைத்தார்கள்? உடன் பிறந்தவர்களேதாம். ஒருவன், எதிரியொடு சேர்ந்து கொண்டு அவன் இரகசியங்களைச் சொன்னான். ஒருவன் தான் உடன் இறந்தான். உடன் பிறந்த ஒருத்தியாகிய சூர்ப்பணகையோ அவனைக் கொல்ல நினைத்தாள். இதைப் பின்னால் இராவணன் இறந்த பிறகு மண்டோதரி வாயிலாக,

‘கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்என் றதுகுறித்துக்
கொடுமை சூழ்ந்து
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப்
பழிதீர்ந் தாளோ ?’ (இராவண. 225)

என்று விளக்கிக் காட்டுகின்றார் கம்பர். இவ்வாறு கொடிய இராவணனையும் நல்லவன் என்றும், அவன் கெட்டது விதி வழியே என்றும் காட்டும் திறம் போற்றத் தக்கதன்றோ? இவ்வாறே இன்னும் எத்தனையோ வகையில் கம்பர் மக்கள் வாழ, மாநிலம் வாழப் பலப்பல உண்மைகளை உணர்த்திக் கொண்டே தம் கவிதையை வாழ வைத்துவிட்டார் என்று கூறும் அளவில் இன்று என் உரையை முடித்துக்கொள்ளுகிறேன்.